மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது.

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின்
இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது
மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
25.11.2019

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மானமாவீரர்களை நினைவு கூரும் எழுச்சி நாளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அனைத்துத் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் தெய்வங்களாக வணங்கப்படுகின்ற மாவீரச்செல்வங்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி வழிபடும் புனிதநாள் நெருங்கிவிட்டது. தமிழீழ மக்களாகிய நாம் அந்த புனிதமானவர்களைக் கண்முன்னே கொண்டுவந்து அவர்களுடன் பேச ஆவலுடன் காத்திருக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தேசத்தின் நாயகர்களை வணங்குவோம் வாருங்கள்.

எம் தேசமே வாழ்வு என்றும், அத்தேசமே உயிர் என்றும் எமது தேசியத் தலைவர் காட்டிய வழியில் சென்று அதனை மீட்டெடுக்கத் தம்மையே உருக்கியவர்கள் எங்கள் மாவீரர்கள். தேசியத் தலைவரின் கட்டளையைச் சிரமேற்றுத் தரைப்புலியாக, கடற்புலியாக, கரும்புலியாக, வான்புலியாகச் சென்ற பெரும் தியாகிகள். தமக்கென்று வாழாது, தம் வாழ்வையே எமக்காகத் தந்தவர்கள். எதிர்காலச் சந்ததி தமிழீழத் தேசத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரே
இலட்சியத்திற்காக மடிந்தவர்கள் எமது மாவீரர்கள். எத்தனை தடைகள், துன்பங்கள் வந்தபோதும் இறுதிமூச்சு உள்ளவரை அயராது களத்திலே நின்று போராடிய காவற்தெய்வங்களை மலர்தூவி விளக்கேற்றி வணங்கிட வாருங்கள்.

எமது தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் பிள்ளைகளைத் தந்த பெற்றோர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களை மதிப்பளிப்பது எமது தலையாய கடமையாகும். அந்த அற்புதமானவர்களைத் தந்த பெற்றோர்கள் என்றும் மதிப்புக்குரியவர்கள் என்பது திண்ணம். மாவீரர் வாரத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பெற்ற இடத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களை மதிப்பளித்தல் நடைபெறுகின்றது. எமது தேசியத் தலைவரின் தீர்க்கமான சிந்தனையில் உருவான இந்நிகழ்வு எமது தேசிய நிகழ்வாகவே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மாவீரர்களைத் தந்த பெற்றோர்களே! அவர்தம் குடும்பத்தினர்களே! இம் மதிப்பளிப்பு நிகழ்வில் தாங்களும் கலந்துகொள்ளும் வண்ணம் பணிவன்புடன் வேண்டிநிற்கிறோம்.

1989 ஆம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்களின் நெருக்கடிகளுக்குள்ளும் எமது தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையில் உதித்ததே அனைத்து மாவீரர்களையும் ஒருசேர வணங்குகின்ற மாவீரர் நாளாகும். அன்றிலிருந்து நடைபெற்று வருகின்ற மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டுநிற்கின்றது. இந் நாள் தமிழினத்தின் கொள்கைப்பற்றையும், எழுச்சியையும், மாவீரர்களின் தியாகத்தையும் உலகிற்கு எடுத்தியம்பி நிற்கின்றது. எத்தகைய இடர்கள் வரினும் எங்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய உருவாக்கப்பெற்ற தேசிய
கட்டமைப்புக்களும், நிகழ்வுகளும் மாவீரர்களின் இலட்சியம் நோக்கியே பயணிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எத்தனை ஆண்டுகள் சென்றாலும், மாவீரர்கள் எந்த இலட்சியத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தார்களோ, அதே இலட்சியப் பாதையில் நாம் உறுதிதளராது தொடர்ந்து பயணிப்போம் என மாவீரர்கள் மீது உறுதியேற்றுக் கொள்வோம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

2019 மாவீரர் பணிமனை அறிக்கை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்