ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியமை தவறானது – ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கையில் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டமை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சீனா நம்முடைய ஒரு நல்ல நண்பராகவும் அபிவிருத்திக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தவறு என்று சொல்ல நான் பயப்படப்போவதில்லை.

இந்த விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்து ஒரு சிறந்த ஒப்பந்தத்துடன் வருமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். முதலீட்டிற்கு ஒரு சிறிய நிலத்தை கொடுப்பது வேறு விடயம். ஒரு ஹோட்டல் அல்லது வணிக தளங்களை உருவாக்குவது ஒரு பிரச்சினை அல்ல.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார ரீதியாக முக்கியமான துறைமுகத்தைக் கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

ஒரு செயற்பாட்டிற்காக துறைமுகத்தின் ஒரு முனையத்தை கொடுப்பது வேறு விடயம், ஒரு ஹோட்டலைக் கட்டுவதற்கு சில இடங்களைக் கொடுப்பது வேறு, எனவே இது ஏற்புடையதல்ல, இதுவே எனது நிலைப்பாடு” என்று கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்