மானச்சிகரத்தின் மகுட தீபம்

வானிருக்கும் மட்டும் நீ
வாழவேண்டும் – உன்னை
நாம் வாழ்த்த வேண்டும்

வானத்தின் எல்லை
போதவில்லை – உன்
வீரத்தின் எல்லை
சொல்ல

பூக்களின் மென்மை
போதவில்லை – மன
ஈரத்தின் தன்மை
சொல்ல

இரும்பெல்லாம்
நொருங்கும் – உன்
உறுதிகண்டு

கருங்கல்லே
உருகும் – உன்
கருணை கண்டு

புயலுக்கு வேகம்
பழக்கினாய்
பூமிக்கு பொறுமை
புகட்டினாய்
தாய்மைக்குப் பாசம்
வழங்கினாய்

நீருக்குள்
நெருப்பெரிக்கும்
நெறியைக்
கொடுத்தாய்

பூவுக்குள்
பூகம்பத்திறனைப்;
புகுத்தினாய்

சாவுக்குள் சாதனைச்
செயலை நடத்தினாய்

இமயம்
நிமிர்ந்து நோக்கும்
ஈகம் கொண்டாய்

இதயம்
எங்கும் வாழ்த்தும்
பேரை வென்றாய்

மானச்சிகர
முகட்டில்
மகுட தீபமானாய்

குளிர்மை கொடுக்கும்
நிலவானாய்
குறையா வீரக்
கொழுந்தானாய்

மன்னா
எங்கள் உயிரானாய்
மங்காதொழிரும்

சுடரானாய்

வானவில்லின்
அழகானாய்
ஈழம் செய்யும்
உளியானாய்
வீரம் விளையும்
வயலானாய்
விடுதலைப் பயிரின்
மழையானாய்
துன்பம் தாங்கும்
துணையானாய்
இன்பம் தந்த
உறவானாய்

வங்கத்தருகில்
வரலாற்றை
வரித்துக் கொண்ட
வல்லவனே

வானிருக்கும் மட்டும் நீ
வாழவேண்டும் – உன்னை
நாம் வாழ்த்த வேண்டும்

-நேரு குணரட்ணம்-

About இலக்கியன்

மறுமொழி இடவும்