2019 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்!

தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவும், ‘தமிழீழத் தனியரசு’ ஒன்றை நிறுவுவோம் எனும் உன்னதமான இலட்சிய வேட்கையோடு களமாடி, சந்தனப் பேழைகளாகத் துயில் கொள்ளும் தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை அஞ்சலித்து மதிப்புறுத்தும் தமிழர் தேசத்தின் வழிபாட்டு முறை பண்பாட்டுத் தொடர்ச்சியை, 2009 க்குப் பின்னரான நெருக்கடியான கால கட்டத்திலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இடையறாது வழித் தொடர்ந்து வந்திருக்கிறது.

இதன் நீட்சியாக வழமை போன்றே இம்முறையும் 2019 ஆண்டுக்கான மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல், நாளைய தினம் (கார்த்திகை 27 அன்று) வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத் தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்க விடப்பட்டு, உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக இடம்பெறும்.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலைமையில், வவுனியா நகரத்தில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், வவுனியா மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், வித்துடல்களாக விதைக்கப்பட்டுள்ள மற்றும் நடுகற்களாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின், பெற்றோர்கள் – உறவினர்கள் – நண்பர்கள் – உரித்துடையவர்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாவீரத் தெய்வங்களை விசுவாசமாகவும் – நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து வீரவணக்கம் செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியாதவர்கள், கார்த்திகை 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் மாவீர ஆத்மாக்களை அஞ்சலித்து மதிப்புறுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையாய் … உரிமையாய் … உணர்வாய் …

மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

தலைவர் கோ.ராஜ்குமார், (0094 77 854 7440)
செயலாளர், தி.நவராஜ்,
ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா

About இலக்கியன்

மறுமொழி இடவும்