ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்

வல்லவை தந்த வல்லவனே! நீங்கள்
சொன்னவை யாவும் தமிழினப் பற்றே!
கற்றவை முழுதும் தமிழ் உணர்வே!
சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே!

வரி உடையில் வாழ்த்திருப்பாய்
வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய்
கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே
கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே!

மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய்
மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய்
மாறாத கொள்கை கொண்ட தமிழனே!
மறவோமா உந்தன் அழகு வதனமதை

படை நகர்த்தும் பாணியும் அழகு
தடை தகர்க்கும் திறனும் அழகு
எடை போட்டு தீட்டும் திட்டமும் அழகு
நடை நடையாய் நடந்து உலவுவதும் பேரழகு

மொழி மீது நீங்கள் கொண்ட அடங்காத பற்று
விழியோடு செறிந்திருக்கும் தமிழின் இன்ப ஊற்று
வழிமாறாது ஈழம் வீசும் அண்ணா உங்கள் மூச்சுக்குக் காற்று
எழில் கூறும் புன்னகையே நீங்களே தமிழின் நாற்று

சொத்துக்களில் பற்றுக் கொள்ளாத புனிதனே!
பெற்றெடுத்த மகவுகளையும் போராட அனுப்பிய மறவனே!
என்ன சொல்லி உங்களை பாடிட
தமிழில் வார்த்தையில்லையே உங்களை போற்றிட

தமிழீழமே உயிர் மூச்சென கொண்டவனே!
தமிழினம் சிறப்புற வாழ போரிட்ட வீரத்தமிழனே!
போரிலும் அறம் காத்த முதல்வனே!
அகிம்சை அறத்தில் அன்பு கொண்ட எங்கள் தலைவனே!

எங்கிருப்பாய் என்றே இதயம் பல நூறு வினாவை கேட்கும்
எங்கிருந்தாலும் எங்கள் இதயத்தில் வசிக்கும் தலைவனே!
சங்க கால அரசனை படித்ததுண்டு
எங்கள் கால பிரபாகரன் போல் எக்காலத்திலும் கண்டதில்லை அண்ணா!

கோடான கோடி ஆண்டுகள் கடந்தாலும்
கோலம் மாறி பூகோளம் அழிந்தாலும்
தமிழன் புதிய பூமிப்பந்தில் பிறந்திட
அவன் பேச்சும் மூச்சும் உங்கள் நாமம் நிறைந்திருக்கும்

தமிழினத்தின் இரத்த ஓட்டமே!
உங்களை நம்பியே எங்களின் உயிரோட்டமே!
காட்டிய நல்வழியில் பின்பற்றிடுவோமே
காலம் கரைந்தாலும் கரிகாலனை மறவாது வாழ்வோமே…!

ஞாரே.

About இலக்கியன்

மறுமொழி இடவும்