தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலான யுத்தம்! கடவுளைத் தவிர எங்களை யாரும் மிரட்ட முடியாது – டிடிவி தினகரன் பேட்டி

கடவுளைத் தவிர எங்களை யாரும் மிரட்ட முடியாது என டிடிவி தினகரன் பேசிஉள்ளார்.

அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதனையடுத்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதிக்கு சென்றுவிட்டனர். டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் சாய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களை கடவுளை தவிர வேறு யாராலும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும் மட்டுமே கட்டுப்படுபவர்கள் நாங்கள். தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான யுத்தம், 19 எம்.எல்.ஏ.க்களும் ஏதோ அவர்கள் வாங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் அங்கு செல்லவில்லை. 19 எம்.எல்.ஏ.க்களும் மக்களின் இயக்கத்தை காக்கவேண்டும் என்ற தியாக உணர்வோடு அங்கு அமர்ந்து உள்ளனர். அதனால்தான் நீங்களும் இங்குவந்து கேள்வி எழுப்புகிறீர்கள்.

இந்திய துணை கண்டமே இதனை உற்று பார்க்கிறது. ஆளுநர் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என 19 எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கையில் உள்ளனர். சில அமைச்சர்கள் பணம் பாதாளம் வரையில் பாயும் என சொல்கிறார்கள், தியாகத்திற்கும், கட்சிக்கும் போராடுபவர்கள் மீது பணம் பாயாது. அவர்கள் அந்த அணியில் இருந்து இருந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பது எல்லாம் அவர்களுக்கும் தெரியும்.

என்னோடு நிற்பவர்களே உண்மையாக தர்மத்திற்காக போராடுபவர்கள். பொதுச்செயலாளரை நீக்க வேண்டும் என்றவர்களுக்கு பாடம் புகட்டவே எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ளனர். யாருக்கும் பயந்து கிடையாது. நியாயம் நிச்சயம் வெற்றிப்பெறும். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையானது உள்ளது. கட்சியை காக்கவேண்டும் என்ற அவர்களுடன் நான் உள்ளேன், என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்