விந்தன் கனகரட்ணத்தின் புறக்கணிப்பும் விக்கியின் நல்லெண்ண பார்வையும்!

வடக்கு மாகாண சபையில் நிலவிய நீண்ட குழப்பமாகிய போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக விளங்கிய பா.டெனிஸ்வரனின் அமைச்சு பொறுப்பு தொடர்பில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நீக்கியதுடன் அந்த பதவிக்கு யாரை அமர்த்துவது என்னும் கேள்விக்கான பதிலை முதலமைச்சரே முடித்து வைத்தமை கட்சி தாண்டிய நல்லெண்ணம் என்றே கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் டெனிஸ்வரனை பதவி நீக்கும் முன்பே ரெலோ உயர்பீடம், டெனிஸ்வரனின் முதலமைச்சருக்கு விரோதமான போக்கை வைத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த பொறுப்பை ரெலோ கட்சியின் விந்தன் கனகரத்னத்துக்கு வழங்க முடிவசெய்து அந்த கோரிக்கையை விக்கினேஸ்வரனுக்கும் அனுப்பி இருந்தது.

இந்த விடயத்தில் இரண்டு நோக்கங்கள் ரெலோ கட்சியிடம் இருந்தது. ஒன்று, முதலமைச்சர் விரோதபோக்கை கொண்டிருந்த டெனிஸ்வரனின் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் விக்கியின் நல்லாதரவு பெற்ற கட்சியாக விளங்குதல். இன்னொன்று ஒரு வேளை அமைச்சரவையில் இருந்து டெனிஸ்வரன் தூக்கப்பட்டால், அமைச்சரவை வெற்றிடத்தை ரெலோ கட்சியின் முக்கியமான உறுப்பினர் மூலம் நிரப்புதல்.

இரண்டாவது நோக்கத்தை மனதில் வைத்தே அவசரமாக ரெலோ மேலிடம் கூடியதும் உடனடியாக புதிய அமைச்சருக்குரிய சிபாரிசை மேற்கொண்டமையும் ஆகும். ஆனால் இந்த விடயத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கட்சி சிபாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மாவட்ட நலன் சார்ந்த மற்றும் துறை வல்லமை சார்ந்த விடயம் ஒன்றிற்கு முன்னுரிமை கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. அதாவது நீண்ட காலமாக அரசியல் பதவி விடயத்தில் ஓரங்கட்டப்பட்டு வந்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புளொட் சிவநேசன் அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஆறுதல் தரக்கூடிய ஒரு விடயம்.

அதேவேளை ரெலோவின் சிபாரிசுக்கு ஒத்து போகாமல் மருத்துவ துறை சார்ந்த ஒருவரை சுகாதார துறைக்கு நியமித்தமையும் முதலமைச்சரின் சிறந்த செயற்பாடே ஆகும்.

வைத்திய கலாநிதி குணசீலனை சுகாதார துறை அமைச்சராக்கிய விடயத்தில் முதலமைச்சர் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துள்ளார்.
ஒன்று, குணசீலன் ரெலோ கட்சியில் போட்டியிட்டு வென்றவர். எனவே ரெலோ கட்சியின் உயர்பீடத்தின் நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது. இரண்டு, அவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர். எனவே டெனிஸ்வரனின் இழப்பு மன்னார் மாவட்டத்திற்கு இல்லை. மூன்றாவது, ஏலவே இருந்த சத்தியலிங்கத்தை போல இவரும் வைத்திய கலாநிதி எனவே துறை சார்ந்த அமைச்சர் என்னும் பதம் இழக்கப்படவில்லை.

இந்த அமைச்சரவை நியமனத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கட்சி தாண்டிய மக்கள் மற்றும் மாவட்ட நலன்களை கருத்தில் கொண்டமை நல்லதொரு விடயம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்