சுமந்திரனின் பதவிகள் பறிக்கப்படுகின்றனவா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரனை அகற்றி, புதியவர் ஒருவரை நியமிக்கும் நகர்வுகள் ஆரம்பித்துள்ளன. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான மூன்று கட்சிகளின் தலைமைகளும் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளன. ஓரிரு நாளில் தமது முடிவை மூன்று கட்சிகளும் கூட்டாக, கூட்டமைப்பின் தலைமையிடம் முன்வைக்கவுள்ளன.

புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ள நிலையில், அதற்கடுத்த ஓரிரு நாளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது. இதன்போது, இந்த விடயம் ஆராயப்படும்.

கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் சரிவிற்கு எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணமாக கூட்டமைப்பிற்குள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிங்கள ஊடகமொன்றில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக சுமந்திரன் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென எழுந்த கருத்துக்கள் தற்போது தீவிரம் பெற்றுள்ளத.

தற்போது, எம்.ஏ.சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் தலைமையும் தீர்மானித்துள்ளது. பங்காளிக்கட்சிகளிற்கு தமது ஆதரவை தமிழ் அரசு கட்சி தலைமை வழங்கியுள்ளது.

கடந்த முறை தமிழ் அரசு கட்சியிடம் பேச்சாளர் பொறுப்பு இருந்ததால், இம்முறை மற்றைய இரண்டு கட்சிகளின் சார்பில் பேச்சாளர் ஒருவர் முன்னிறுத்தப்படலாமென தெரிகிறது. அனேகமாக அது ரெலோ கட்சியின் உறுப்பினராக இருப்பார்.

நேற்று முன்தினம் திருகோணமலையில் நடந்த ரெலோவின் தலைமைக்குழு கூட்டததிலும் இது குறித்து ஆராயப்பட்டது.

சுமந்திரன் மாற்ற கோரிக்கையை இரா.சம்பந்தன் இயன்றவரை இழுத்தடிக்கவே முயற்சிப்பார். அவர் கூட்டமைப்பின் தலைவராக செயற்படுவதை விட, சுமந்திரன் ஆதரவாளராகவே அதிகமான சமயங்களில் செயற்பட்டதால், இந்த கோரிக்கையை இழுத்தடிக்க கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவில் வாக்கெடுப்பிற்கு விட வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவில் எம்.ஏ.சுமந்திரன் அணியில்- சி.சிறிதரன், சாணக்கிய ராகுல் வீரபுத்திரன், த.கலையரசன் ஆகியோர் உள்ளனர். புதிய பேச்சாளரிற்கு செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் ஆகியோர் ஆதரவளிப்பார்கள். வன்னி எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் கடந்த காலத்தில் சுமந்திரன் எதிர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தினாலும், அண்மையில் சுமந்திரன் சார்பில் மாவை சேனாதிராசாவிடம சமரச பேச்சிற்கு சென்றிருந்தார்.

இதனால், சாள்ஸின் உண்மையான நிலைப்பாடு வாக்கெடுப்பில் வெளிப்படும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்