தமிழனை முதுகில் சுமந்த தட்டி வான் ஞாபகம் இருக்கிறதா?

முதுகில் சுமந்து தமிழர்களோடே இடப்பெயர்வு அவலங்களைத் தாங்கிநின்ற தட்டிவான்கள் இப்பொழுது எங்கே?
எத்தனைபேருக்கு இது இன்னமும் ஞாபகத்திலிருக்கின்றது?

இது ஒரு பிரித்தானியத்தயாரிப்புத்தான், ஆனாலும் இதற்குரிய அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுத்து நிலைநாட்டியவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களே.

இன்றைய ‘மினிபஸ்’கள் ஆற்றுகின்ற சேவையையே அன்றைய தட்டிவான்களும் செய்தன. ஆனாலும் இன்றைய மினிபஸ்களில் மக்கள் நடத்துனர்களால் ‘திட்டுக்கொட்டு’ வாங்குவதும், பயணிகளின் நெரிசல்களால் புளுங்கி அவிவதும், சில்லறைக்காசு கொடுக்காமல் ஏமாற்றப்படுவதும், இன்னும்பிற வதைப்புக்களுமென அன்றைய தட்டிவான்களில் முற்றாகவே காணப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இத்தகைய போக்குவரத்து மீறல்களைக் கண்டவிடத்து லஞ்சம் எனும் போர்வையால் இழுத்துமூடிக் குளிர்காய்கின்ற இன்றைய பொலிஸாரினைப் போலன்றி அன்று புலிகள் இருந்தார்கள்.

வலிகாம இடப்பெயர்வு நிகழ்ந்த பாரிய போர்க்காலமான 1995களில் இதன் அளப்பரிய பங்களிப்பினை உணர்ந்திருக்கிறேன். உற்ற உறவுகளோடு கூடிமகிழ்ந்திருந்த கோவில்கள், ஒற்றை வரம்புகளில் ஓடிமகிழ்ந்திருந்த வயல்வெளிகள் என அனைத்தையும் இழந்து முற்றத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகள் கொடுத்த பீதியினால் கையிலகப்பட்ட பொருட்களோடு நெடுந்தூரம் நடைப்பிணமான அந்த இடப்பெயர்வுக் காலத்தில் ஏழெட்டு வயதுச் சிறுவனாக இருந்தாலும் இந்த தட்டிவான்களை வியப்போடு பார்த்து ரசித்திருக்கிறேன்.

வலிகாமத்திலிருந்து தென்மராட்சிக்கும் தென்மராட்சியிலிருந்து வடமராட்சி கிழக்குக்குமென ஒரே கால்நடையாகவே அலைந்த அந்தக் கணங்களில் சாவகச்சேரி நகரிலிருந்து கொடிகாமம் நகர்வரை இந்தத் தட்டிவான் எமது குடும்பத்தின்மீதும் இரக்கப்பட்டு ஏற்றிச்சென்றது. சிறுதூரப் பயணம்தான், ஆனாலும் அப்பயணத்தின்போது ‘புட்காரா’ ரக விமானத்தின் பேரிரைச்சலுடனான வட்டமிடலில் கதிகலங்கிப்போய் தட்டிவானுள்ளே உயிர்வெறுத்து மூழ்கிப்போயிருந்த அந்தச் சொற்பநேரக் கணங்கள் மிகப்பெரியது.

வன்னியில் போர் ஓரளவு ஓய்விற்கு வந்தபின் யப்பானிலிருந்து மினிபஸ்கள் வரத்தொடங்கின. இவை வடக்கிலும் ஆக்கிரமிக்கத்தொடங்கிய 2000ம் ஆண்டுகளின்பின் தட்டிவான்களின் சேவைகள் அஸ்தமிக்கத்தொடங்கின. இன்று இவை எந்தக் கோடிக்குள் அடைபட்டுக்கிடக்கின்றனவோ என மனம் அங்கலாய்க்கின்றது. கொடிகாமத்தில் ஒன்றிரண்டு ஓடித்திரிவதாக நண்பரொருவர் கூறியிருந்தார்.

வடகிழக்கிற்கு ஏற்பட்ட பொருளாதாரத் தடைகளினால் ‘ரயர் ரியூப்’ தட்டுப்பாடான காலத்திலும் வைக்கோலும் மண்ணும் அடைந்து வாகனமோட்டியவர்கள் நாம்; எரிபொருள் தரமறுத்த காலத்தில் இலுப்பெண்ணெயிலும் தேங்காயெண்ணெயிலும் வாகன இயந்திரங்களை இயங்கவைத்தவர்கள் நாம். இவ்வாறான அவலங்களூடான சாதனைகளிலெல்லாம் எம்மோடு ஒன்றாயிருந்த உற்ற தோழன் நீ எங்கிருந்தாலும் வாழ்க!

About இலக்கியன்

மறுமொழி இடவும்