கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

நேற்றைய தினம் சிறிலங்காவின் சுதந்திர தினம் , ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று சிங்கள பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவும் , தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் நடைபெற இருக்கும் 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் யேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையுடன் , நூற்றுக்கணக்கான மக்கள் யேர்மன் தலைநகரில் உள்ளே வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக அணிதிரண்டு போராடினர்.

தமிழீழ மண்ணின் விடிவிற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தியதோடு “நீதியின் எழுச்சி” கவனயீர்ப்பு ஆர்ப்பா ட்டம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்தது.

யேர்மனியில் மிக மோசமான கொரோனா தொற்று நோய் பரவல் இருக்கும் புறச்சூழலிலும் யேர்மனியில் உள்ள பல்வேறு நகரங்களிலும் இருந்து வருகை தந்த உணர்வாளர்கள் , கொரோனா தொற்று நோய்க்கு எதிரான விதிமுறைகளை கடைப்பிடித்து இப் போராட்டத்தில் கொட்டொலி முழங்க நீதிக்கான கோசங்களை எழுப்பினர்.

குறிப்பாக இளையோர்கள் இப் போராட்டத்தில் முக்கியமான பங்களிப்பை செலுத்தியதோடு யேர்மன் மொழியில் கோசங்களை எழுப்பி தமிழின அழிப்புக்கு நீதி கோரினர். மதியம் 14 மணிக்கு வெளிவிவகார அமைச்சுக்கு மனு கையளிக்கப்பட்டதோடு, 58 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆதரவு அளித்த மனுவை யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது. அத்துடன் யேர்மன் அரசின் மனிதவுரிமை ஆணையாளரின் பதில் கடிதத்தையும் மக்கள் முன் எடுத்துரைக்கப்பட்டது. 46 வது ஐநா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் யேர்மன் அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க முக்கிய பங்காற்ற வேண்டும் எனும் கோரிக்கையுடன் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பாடல் தகவல்களையும் எடுத்துரைக்கப்பட்டது.

கடும் குளிருக்கும் மத்தியிலும் பதாதைகளை தாங்கிய வண்ணம் எழுச்சியுடன் நீதிக்காக போராடிய மக்கள் தமிழீழ விடுதலையை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்து, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலுடன் “நீதியின் எழுச்சி” நிகழ்வை நிறைவுசெய்தனர்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்