துவாரகா விவகாரம் : விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு அறிக்கை

புலம்பெயர்‌ தேசங்களில்‌ தழிழ்த்தேசியம்‌ சார்பில் இயங்கும் அமைப்புக்களின்‌ செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப்‌ புலிகளின் போராளிகள்‌ கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் உரையாடல் காணொளி வெளியிடப்பட்டது

இந்த காணொளி தொடர்பில் போராளிகள்‌ அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது தேசவிடுதலை வரலாற்றை திரிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி அதன்‌ மூலம்‌ ஒட்டுமொத்த தமிழ்‌ தேசிய சிந்தனையை மழுங்கடிக்க பல்வேறு சக்திகள்‌ மிகமுனைப்புடன்‌ செயற்பட்டு வருகின்றன.

முன்னொருபோதும்‌ இல்லாத அளவிற்கு தற்போது இந்த நாசகார செயற்பாடுகள்‌ மிகத்‌ தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில்‌ தமிழ்த் தேசியத்தின்‌ அசைக்கமுடியாத ஆணிவேராக தமிழ்‌ மக்களின்‌ மனங்களில்‌ ஆழமாகப்‌ பதிந்திருக்கும்‌ தமிழீழ தேசியத்‌ தலைவர்‌ மற்றும்‌ அவரது குடும்பத்தினரின்‌ அர்பணிப்புக்களை, தியாகங்களை கொச்சைப்படுத்தும்‌ செயற்பாடுகள்‌ நன்கு திட்டமிட்ட வகையில்‌ மீளவும்‌ முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுயலாபம்‌ கருதி துணைபோவது

இதற்கான பிரதான நோக்கம்‌ எமது தாயகம்‌, தழிழகம்‌ மற்றும்‌ புலம்பெயர்‌ தேசங்களில்‌ தழிழ்த்தேசியம்‌ நோக்கி பயணித்து கொண்டிருக்கும்‌ அமைப்புக்களின்‌ செயற்பாடுகளை வலுவிழக்கச்‌ செய்வதேயாகும்‌.

இதற்காக இலங்கை அரசும்‌, வல்லாதிக்க சக்திகளும்‌ ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன. இவர்களின்‌ இந்த சதிச்செயலுக்கு சில தனிநபர்களும்‌ மற்றும்‌ அமைப்புக்களும்‌ சுயலாபம்‌ கருதி துணைபோவது வரலாற்றுத்‌ துரோகமாகும்‌.

இந்த சதி நடவடிக்கையின்‌ தற்போதைய வடிவமாக இடம்பெற்றது, எமது தேசியத்‌ தலைவரின்‌ புதல்வி துவாரகாவின்‌ பெயரில்‌ நடத்தப்பட்டது ஒரு அரிதாரம்‌ பூசிய அற்பத்தனமாகும்‌.

2023ம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ 27ம்‌ திகதி காணொளியில்‌ தோன்றி உரை நிகழ்த்தியவர்‌ தமிழீழ தேசியத்‌ தலைவரின்‌ மகள்‌ துவாரகா அல்ல என்பதும்‌ அவர்‌ புனையப்பட்ட போலி என்பதும்‌ தற்போது யாவரும்‌ அறிந்த உண்மை. இத்தகைய நடவடிக்கைகள்‌ இனிவரும்‌ காலங்களிலும்‌ தொடரவே செய்யும்‌ என்பதை கருத்தில்‌ கொண்டு செயலாற்றவேண்டிய நிலையில்‌ நாம்‌ உள்ளோம்‌.

எமது விடுதலைப்‌ போராட்டமானது ஆரம்பகாலம்‌ முதல்‌ பல்வேறு துரோகங்களை, சதிகார நடவடிக்கைகளைச்‌ சந்தித்தே வந்துள்ளது. இந்த காலகட்டங்‌ களில்‌ எல்லாம்‌ எமது மக்கள்‌, உணர்வாளர்கள்‌, ஊடகங்கள்‌ என பல்வேறு தரப்புக்களும்‌ எமக்கு உறுதுணையாய்‌ இருந்துள்ளனர்‌.

அந்தவகையில்‌ தற்போது முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கையை புரிந்து கொண்டு எதிர்வினையாற்றிய அனைத்துத்‌ தரப்பினருக்கும்‌ நாம்‌ எமது நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌கொள்கிறோம்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் உண்மைகளை கண்டுணர்ந்து அவற்றை காத்திரமாக வெளிப்படுத்திய பத்திரிகைகள்‌, வலைத்தளங்கள்‌, காணொளித்‌ தளங்கள்‌ மற்றும்‌ சமூக ஊடகங்கள்‌ என்பனவற்றிற்கும் தமிழீழ விடுதலைப்‌ புலிகளின் போராளிகள்‌ அமைப்பு நன்றிகளை தெரிவித்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்