தமிழரசுக்கட்சி உடைவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட ஒரு கட்சியாகும். இடம் பெறவில்லை கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக அக் கட்சி உடையக் கூடிய வாப்புள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்க்காக ஒரு கூட்டு தலமையை உருவாக்க வேண்டும் ஏன்று சமுக விஞ்ஞான ஆய்வுமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தமிழரசு கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலமைக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில் அப்போட்டியால் தமிழரசு கட்சிக்குள், பிளவுகள் ஏற்படக் கூடிய அபாயம் உள்ள நிலையிலேயே குறித்த மூவரும் அடங்கிய கூட்டு தலமை ஒன்றினை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் முழு விபரமும் வருமாறு
ஜனநாயக சமூகத்தில் அரசியல் கட்சிகள் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துபவையாகும்.

அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்படும் போது அவை மக்களின் அபிலாசைகளையும், வெகுவாகப் பாதிக்கும். தமிழரசுக்கட்சி வடக்கு – கிழக்கு முகம் கொண்ட கட்சி. ஏனைய தமிழ் கட்சிகளுக்கு அந்த முகம் கிடையாது. கிழக்கு மாகாணத்தில் இனக்கட்டமைப்பு ஏனைய கட்சிகள் செல்வாக்குப் பெறுவதற்கு வாய்ப்புக்களையும் கொடுப்பதில்லை. ஐக்கிய முன்னணியாக செயற்படும் போது மட்டுமே ஏனைய கட்சிகளுக்கு அங்கு வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தற்போது தலைமைத்துவப்போட்டி காரணமாக தமிழரசுக்கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சுமந்திரனுக்கும் , சிறீதரனுக்கும் இடையிலேயே அந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டிற்கு கொள்கை அரசியல் , அணுகு முறை அரசியல் என்பன காரணங்களாக உள்ளன. சுமந்திரன் அடையாள அரசியலையும், சிறீதரன் இறைமை அரசியலையும் நகர்த்தி வருபவர்கள். இந்த கொள்கை வேறுபாடு காரணமாக சுமந்திரன் இணக்க அரசியல் மீதும் சிறீதரன் எதிர்ப்பு அரசியல் மீதும் அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்.

சர்வதேச அரசியலைப் பொறுத்த வரையும் கூட சுமந்திரன் மேற்குலகம் சார்பானவராகவும், சிறீதரன் இந்திய சார்பானவராகவும் உள்ளனர்.
இக் கொள்கை வேறுபாடுகள் காரணமாக சுமந்திரன் இலங்கைத் தேசியத்தையும், சிறிதரன் தமிழ்த்தேசியத்தையும் உயர்த்திப்பிடிக்கின்றனர்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக கட்சியிடம் திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடுகள் இல்லாமையும், நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது. நிறுவன வழிகாட்டலின் கீழான செயற்பாடுகளை அங்கு காணமுடியவில்லை. தனித்தனியான ஓட்டங்களே அங்கு நிலவுகின்றன. சுமந்திரனுக்கும், சிறீதரனுக்குமிடையிலான தலைமைத்தவப் போட்டி கட்சியை உடைவுக்குக் கொண்டு செல்லும் என்ற தோற்றம் தெரியத்தொடங்கியுள்ளது.
தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட கட்சியாக இருப்பதனால், இவ்வுடைவு தமிழ்தேசிய அரசியலை மிக மோசமாகப் பாதிக்கும். சுமந்திரன் கட்சியின் தலைவராக வந்தால் தமிழ்த்தேசிய அரசியலை மேற்கொள்வதற்கான வெளி இல்லாமல் போகும். இந்நிலையில் சிறீதரன் குழுவினருக்கு உடைவைத்தவிர வேறு தெரிவுகள் இருக்காது.
தவிர தலைவருக்கான போட்டியில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் இறங்கியுள்ளார். இவர் வெற்றியடைவதற்கான வாய்ப்புக் கிடைக்காவிட்டால் பிரதேச வாதம் மேலெழும்பும் சூழ்நிலையும் உருவாகும்.

இது நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே போட்டிநிலையைத் தவிர்த்த கூட்டுத்தலைமை ஒன்றை உருவாக்குமாறு கட்சியின் உயர்பீடத்தை சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் வேண்டிக்கொள்கின்றோம். சுமந்திரன் , சிறீதரன் , யோகேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய முக்கூட்டுத் தலைமையை உருவாக்கலாம்.
இம் முக்கூட்டுத்தலைமையில் சுமந்திரன் சர்வதேச , தென்னிலங்கை விவகாரங்களையும், சிறீதரன் வடக்கின் உட்கட்சி விவகாரங்களையும், யோகேஸ்வரன் கிழக்கின் உட்கட்சி விவகாரங்களையும் கையாளட்டும்.
தீர்மானங்களை மூன்றுபேரும் ஏகமனதாக எடுக்க வேண்டும். தனித்தனியான ஓட்டங்கள் இங்கு வேண்டாம்.
கூட்டுத்தலைமை என்பது தமிழ் மக்களுக்கு புதியதொன்றல்ல. 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா , ஜீ.ஜீ.பொன்னம்பலம் , தொண்டமான் உள்ளடங்கிய கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போதும் கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டது. கட்சியாப்பு கூட்டுத்தலைமைக்கு இடம்கொடுக்காவிட்டால் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இனிவரும் காலங்களில் தமிழ்த்தேசிய அணியில் இந்தியசார்பு அணி , மேற்குலக சார்பு அணி , புலிகள் சார்பு அணி என மூன்று அணிகள் தொடர்ச்சியாக இருக்கத்தான் போகின்றன.
இந்த மூன்று அணிகளுக்குள்ளும் பொதுப்புள்ளியை கண்டுபிடித்து இதனை பலப்படுத்துவது பற்றி கவனங்களைக் குவிக்க வேண்டும்.
தமிழரசுக்கட்சி மரபுரீதியாக கட்சித்தலைவர்களையும் , நிர்வாகத்திற்கான முக்கிய பதவிகளுக்குரியவர்களையும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்வதே வழக்கமானதாகும். கட்சியின் ஒற்றுமையைக் கொண்டே இவ் அணுகுமுறை பின்பற்றப்படுகின்றது. இந்தத் தடவையும் போட்டியைத் தவிர்ப்பதே ஆரோக்கியமானதாகும்.

தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தை இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தும்படி தாழ்மையாக வேண்டுகின்றோம் ஏன்றுள்ளது.

சி. ஜோதிலிங்கம்
இயக்குனர்
சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்