தமிழரசின் தலைமைப் பதவியை கிழக்குக்கு ஏன் வழங்கக்கூடாது? பனங்காட்டான்

தமிழரசுக் கட்சி நிறுவப்பட்ட 1949ம் ஆண்டிலிருந்து இதுவரை அதன் தலைமைப் பதவியை வடக்கின் பிரதிநிதிகள் ஐவரும், கிழக்கின் பிரதிநிதிகள் மூவரும் வகித்துள்ளனர். வடக்கு கிழக்கு இணைப்பை நாளும் பொழுதும் பேசுபவர்கள் இப்பதவியை முறைப்படி கிழக்கு மாகாணத்துக்கு ஏன் வழங்கக்கூடாது.

அடுத்த மூன்று வாரங்களில் பிறக்கப்போகின்ற 2024 இலங்கையில் தேர்தல் ஆண்டாக பிரகடனமாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் இவ்வருடத்தில் இடம்பெறுமென நம்பிக்கையூட்டும் வகையில் அறிவித்து வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. இவரது கடந்த கால வாக்குறுதிகளை அறிந்தவர்கள் தேர்தல் அறிவிப்பை முழுமையாக நம்புவதாக இல்லை.

இரண்டு தேர்தல்களில் ஒன்று இடம்பெறும், ஆனால் அது எதுவென்று கூற முடியாதென பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இரண்டில் எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் அதன் வெற்றி தோல்வியில் இவரது அணிக்கு முக்கிய வகிபாகம் இருக்கும்.

இம்முறையும் தமிழ் மக்களின் வாக்குகளே ஜனாதிபதி தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்ற தோரணையில் சிலர் கருத்துகளை பரப்பி வருகின்றனர். இப்படியான எதிர்பார்ப்புகள் இருந்ததால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 65 லட்சம் சிங்கள வாக்குகள் கோதாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. இதற்கிடையில் தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென்ற குரலும் வந்ததைவிட போனது வேகமாயிற்று.

இப்போது தாயகத் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்கள் எதிர்நோக்கும் முக்கியமான தேர்தல் தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வது. எப்போதும் இல்லாதவாறு முதன்முறையாக இப்பதவிக்கு இருவரின் பெயர்கள் தாக்கலாகியுள்ளது. இவர்களில் ஒருவர் விலகிக்கொள்ளாவிடில் வாக்களிப்பு தேர்தலாக இடம்பெறுவது தவிர்க்க முடியாது போகும்.

கடந்த பொதுத்தேர்தலின்போது ஒருவர் தோளில் மற்றவர் கைபோட்டவாறு கூட்டாக வாக்கு வேட்டை நடத்திய சிவஞானம் சிறீதரனும், எம்,ஏ.சுமந்திரனும் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இது சிலவேளைகளில் ஏற்கனவே சிதறுண்டு போயிருக்கும் கட்சியை அடிநிலைக்குக் கொண்டு செல்லலாம்.

கடந்த பொதுத்தேர்தலில் இவர்கள் இருவரும் தாம் வெல்ல வேண்டுமென்பதற்காக இணைந்து பரப்புரை செய்து வாக்குகளைப் பெற்று ஒருவாறு வென்றனர் யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்றாவது இடம் அப்போதைய கூட்டமைப்பின் புளொட் பிரதிநிதியான சித்தார்த்தனுக்குக் கிடைத்தது.

இந்த வகையில் தாம் இருவருமே கட்சியின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர்கள் என்று இவர்கள் தமக்குள் நினைத்துக் கொண்டார்கள்போல் தெரிகிறது. பொதுத்தேர்தலின்போது இரட்டையர்களாக மக்களுக்குக் காட்சியளித்தவர்கள் இப்போது எதிரெதிராக நிற்கின்றனர்.

1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி தனிக்கட்சியாக உருவான தமிழரசுக் கட்சிக்கு ஆங்கிலத்தில் பெடரல் (சம~;டி) கட்சி என்ற பெயருண்டு. இதன் நிறுவகத் தலைவர் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் காலத்துக்குக் காலம் மாறாத அடிப்படைக் கொள்கைகளுடன், பல பெயர் மாற்றங்களுக்குள்ளான தமிழரின் அரசியல் அணிக்கு தமிழரசுக் கட்சியே தலைமை வகித்து வந்தது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேளை தமிழர் ஐக்கிய முன்னணி என பெயர் மாறி, வடக்கும் கிழக்கும் இணைந்த தனியாட்சிக் கோரிக்கையுடன் 1977 தேர்தலில் தமி;ழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது. இந்தக் கோரிக்கையின் பலத்தால் வடக்கு கிழக்கில் பதினெட்டு ஆசனங்களை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது.

2001ம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. 2004 தேர்தலின்போது இதன் தலைமைத்துவமும் தமிழரசுக் கட்சிக்கேயானது. இதனால் தமிழர் பிரச்சனைத் தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் இக்கட்சியே பிரதான இடத்தைப் பெற்றது.

இந்தப் பின்னணியில் பார்க்கையில் வளர்ச்சியும், தொய்வும் மாறி மாறி தேர்தல் வேளைகளில் ஏற்பட்டதைக் காணலாம். இருப்பினும் இதனை அழிந்துவிடாது காப்பாற்ற வேண்டுமென்ற மனோபாவம் தமிழரிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

முக்கியமாக, வடக்கையும் கிழக்கையும் இணைத்ததான கட்சியின் செயற்பாடுகள், பிரதான பதவிகள் தெரிவின்போது இரண்டு மாகாணங்களையும் சமத்துவமாக மதிக்கும் தன்மை என்பவை மட்டுமன்றி இதன் தூரப்பார்வையும் மக்களால் விரும்பப்பட்டது.

இதற்கு உதாரணமாக, கட்சியின் தலைமைப் பதவி இரண்டு மாகாணங்களுக்குள்ளும் முரண்பாடு ஏற்படாத வகையில் போட்டியின்றி, ஒருமனதாக கடந்த ஏழரை தசாப்தங்களாக தெரிவானதை குறிப்பிடலாம். அது மட்டுமன்றி தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் இரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தெரிவானதையும் சுட்ட வேண்டும்.

இதுவரை திருவாளர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், என்.ஆர்.இராஜவரோதயம், சி.மு.இராசமாணிக்கம், டாக்டர் இ.எம்.வி.நாகநாதன், அ.அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இவர்களுள் சிலர் மூன்று தடவையும், இரண்டு தடவையும் இப்பதவி வகிப்பதற்கு கட்சிக்குள் விட்டுக்கொடுப்பு இருந்து வந்துள்ளது. என்.ஆர்.இராஜவரோதயம், சி.மு.இராசமாணிக்கம் ஆகியோர் வடக்கில் இடம்பெற்ற கட்சி மாநாடுகளுக்கு தலைமை தாங்கி பெருமை சேர்த்தனர். டாக்டர் இ.எம்.வி.நாகநாதன் கிழக்கில் கல்முனையில் இடம்பெற்ற மாநாட்டில் தலைமை தாங்கியிருந்தார். இது இரு மாகாணங்களதும் தமிழ்த் தேசிய இணைப்புக்கு அடையாளமாக அமைந்தது.

1949ம் வருடத்திலிருந்து இன்றுவரை வடக்கிலிருந்து ஐவரும் கிழக்கிலிருந்து மூவரும் தலைமைப் பதவியை அலங்கரித்துள்ளனர். ஒருபோதும் இப்பதவிக்கு போட்டியிருக்கவில்லை. இப்போது முதன்முறையாக இருவர் பெயரில் வேட்பு மனு தாக்கலாகியுள்ளது. இதில் எவராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லையெனில் அது கட்சியையே பாதிக்கும்.

இருவரில் யார் வென்றாலும் கட்சியை வளர்ப்பதில் அனைவரும் இணைந்தே செயற்படுவோமென சுமந்திரன் இப்போதைக்குத் தெரிவித்திருந்தாலும், அவ்வாறே எல்லாம் சுபமாக முடியுமென்ற அரசியல் காலநிலை ஷவீட்டுக்குள்| இல்லை.

இரு தரப்பினரையும் இணைத்து செயற்படும் ஆற்றலும் முதுமைத் தகைமையும் கொண்ட கட்சியின் மூத்த துணைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம், இப்போதைய தலைமைப் போட்டியில் ஒதுங்கியிராது சுமந்திரனைப் பிரேரித்தது பலரதும் புருவத்தை உயர்த்தியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கின் முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பதவி நீக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அப்போதைய ஆளுனரிடம் சி.வி.கே.சிவஞானத்தினால் கையளிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக சுமந்திரனின் திருகுதாளத்தால் அத்தீர்மானம் தமது கையில் திணிக்கப்பட்டதாக திரு.சிவஞானம் அப்போது பலரிடமும் தெரிவித்திருந்தார்.

திரு. சிவஞானம் இப்போது அதே சுமந்திரனை ஆதரிப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. அடுத்த மாகாணசபைத் தேர்தலில் இவரை முதலமைச்சராக்க சுமந்திரன் உறுதியளித்திருக்கலாம் என்பது முதலாவது. திரு. சிறீதரன் பல தடவை அபாண்டமான கருத்துகளை இவருக்கு எதிராகத் தெரிவித்ததால் அவரை தலைவராக அனுமதிக்கக் கூடாதென்பது சிவஞானம் அவர்களுடைய முடிவுக்கான இரண்டாவது காரணமாக இருக்கலாம்.

1987ல் திலீபன் உண்ணாவிரதம் இருந்தவேளையில் வடக்கு கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகம் அமைக்கும் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் தலைவர் பதவிக்கு திரு. சிவஞானத்தையே விடுதலைப் புலிகள் பரிந்துரைத்தனர். அதேசமயம் இச்சபைக்கு கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதிகள் எவ்வாறு நியமனமாக வேண்டுமென்பதையும் விடுதலைப் புலிகள் அழுத்தம் திருத்தமாக இலங்கை அரசுக்குத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் செல்வாக்கை கிழக்கில் இழக்கச் செய்யும் வகையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெயர்ப்பட்டியலை மாற்றியமைத்ததால் திரு.சிவஞானம் இடைக்கால நிர்வாகத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். இது நிகழ்ந்தபோது பதினெட்டு வயது மாணவனாக இருந்த சிறீதரன் உண்மையை அறியாது அதற்குப் புறம்பாக திரு.சிவஞானத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளை தொடர்ந்து கூறி வந்தமையால் சுமந்திரனை ஆதரிக்கும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டிருக்கலாமென்ற கருத்து பல இடங்களிலும் பகிரப்படுகிறது.

எதுவானாலும், தமிழரது தலைமைப் பதவிக்கு போட்டி, வாக்களிப்பு, வெற்றி தோல்வி என்பவை இருக்கக்கூடாதென்பதே கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமன்றி பலதரப்பட்டவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. இதற்கான ஒரே வழி போட்டியில் இறங்கியுள்ள இருவரையும் ஒருவாறு ஒதுங்கச் செய்து, புதிய ஒருவரை மரபு முறைப்படி போட்டியின்றித் தெரிவு செய்வதே.

தமிழரசுக் கட்சியில் எழுதாத நியமம் என்பது தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் எப்போதும் ஒன்று வடக்குக்கும் மற்றது கிழக்குக்கும் இருக்க வேண்டுமென்பது. இதுவரை தலைமைப் பதவி நிரப்பப்பட்ட முறைமையின்படி பார்க்கின் இம்முறை கிழக்கு மாகாணத்துக்கே தலைமைப் பதவி கொடுக்கப்பட வேண்டும். இக்கருத்து உள்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் மேலோங்கியுள்ளது.

கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட மூத்த பிரமுகரும் முன்னாள் எம்.பியுமான திரு.சிறீநேசனை பலரும் விரும்புகின்றனர். அதேசமயம், நெருக்கடியான காலங்களில் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுடன் இணைந்து பணியாற்றிய மாவை சேனாதிராஜாவை செயலாளராக நியமிக்கலாம் என்ற கருத்தும் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

போட்டிக்குத் தயாரான இருவரும் அதிலிருந்து விலகாவிடில் கட்சியின் ஒற்றுமை பாதிக்கப்படுவது மட்டுமன்றி, கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் தாங்கள் புறக்கணக்கப்படுவது போன்ற உணர்வும் ஏற்படும். இப்போது தேவை தமிழ்த் தேசிய சிந்தனையில் வடக்குக் கிழக்கை இணைத்து செயற்படுத்தக்கூடிய ஒரு தலைவரே. அந்தத் தலைமை இன்றைய நிலையில் கிழக்கிலிருந்து வருவதே மிக மிகப் பொருத்தமானது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்