மயிலிட்டி துறைமுகத்தில் தொழில் செய்வதற்கு ஏற்றதாக இடவசதி போதாதுள்ளது. எனவே இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலப்பரப்பில் மேலும் ஒருபகுதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதேச மீனவர்கள் கோரியுள்ளனர்.
அது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், மயிலிட்டியில் தொழில் செய்யும் மீனவ சங்கம் உள்ளிட்ட மயிலிட்டியில் உள்ள பல சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றை சுமந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்போது, மயிலிட்டி துறை முகத்தில் தொழிலுக்கான மீன்பிடி வலைகளைச் செப்பனிடல், படகு வேலைகளை மேற்கொள்ளல் எனப் பல தேவைகளுக்கும் நிலப்பகுதி போதியதாக இல்லை. கடற்படையினரிடமிருந்து மேலும் ஒரு பகுதி நிலப் பகுதியை விடுவித்துத் தரவேண்டும்.
மயிலிட்டியில் தமது பகுதியில் மாத்திரம் 600 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளவும் அமைத்துத் தரவேண்டும். மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்படப் பல கோரிக்கைகளை அவர்கள் சுமந்திரனிடம் முன்வைத்தனர்.
குறித்த பிரதேசம் பகுதி பகுதியாக அபிவிருத்தி செய்யப்படும். தொழிலுக்கான நில விடுவிப்புத் தொடர்பில் அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அதில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயலாம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.