இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் இந்த காத்திருப்பு!

‘சர்வதேச காணாமல் போனோர் தினம்’ இன்று (புதன்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

முதன்முதலாக, லத்தின் அமெரிக்காவில் இரகசியமாக கைது செய்யப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து கடந்த 1981ஆம் ஆண்டு கொஸ்டரிக்காவில் சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து இத் தினத்தை பிரகடனப்படுத்தின.

உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற விபரம் துல்லியமாக கணிப்பிட முடியாத போதிலும் இலட்சக்கணக்கானோர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படுகிறது.

குறிப்பாக, கடந்த மூன்று தசாப்த கால கொடிய யுத்தம் இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை காணாமல் செய்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டும் பலர் உள்ளனர். யுத்த காலத்தில் மாத்திரமன்றி யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது கண்முன்னே ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கு மக்கள் இன்றும் அல்லாடி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மை அறியாது, இம் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும், மஜர்களை கையளித்தும் பலன் கிடைக்காத நிலையில், சுக துக்கங்களை மறந்து, வீதிகளில் கொட்டகைகளை இட்டு, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து தற்போது மாதக்கணக்கில் போராடி வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல ஆணைக்குழுக்களை நடத்தி விசாரணை செய்து வந்த போதிலும், அதனால் ஆன விடயங்கள் பூச்சியமாகவே காணப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் அமைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியும் இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது குறித்த அலுவலகம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.

ஐ.நா.வுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் இரண்டு வருடத்திற்கும் குறைவான காலமே காணப்படும் நிலையில், அரசாங்கத்தின் நகர்வுகள் மக்களை ஏமாற்றத்திற்குள்ளேயே தள்ளியுள்ளது.

அதிலும், காணாமல் ஆக்கப்பட்டோரில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளமையானது, அவர்களது உறவினர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உயிரிழந்திருக்க முடியும், கொல்லப்பட்டார்களா, அவ்வாறு கொல்லப்பட்டால் யாரால் கொல்லப்பட்டார்கள், அதற்கான அனுமதியை வழங்கியது யார் என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு விடை தேட முயற்சித்தால், அரசாங்கம் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது. ஆக, இப்பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கம் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்வது உறவினர்களின் உரிமை என ஐ.நா. சாசனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கடந்த எட்டு வருட காலமாக வாழும் அவர்களின் உறவினர்களின் காத்திருப்பு, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது விடைகாண முடியாத கேள்வியாகவே உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்