காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிகேட்டு யாழில் போராட்டம்!(2ஆம் இணைப்பு)

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் யாழ்.பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் யாழ்.மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ,மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஓர் கண்துடைப்பு நாடகம், இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் மற்றும் இரகசிய முகாம்களில் உள்ளவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை வெளியிட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களை கைகளில் ஏந்திய வண்ணம் காணப்பட்டார்கள்.

அத்துடன் வயது முதிர்ந்த காலத்திலும் தமது பிள்ளைகளுக்காக போராடும் தாய்மாரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மிகவும் கவலையுடனும், கண்ணீருடனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

   செய்தி மற்றும் படங்கள் ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்