சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன.சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்க மாகாணத்தின் பிரதான நிகழ்வாக கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம்,அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இனியும் வேண்டாம் இந்த துயரம் என்னும் தலைப்பில் அபரிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை வெளிக்கொண்டுவர,அவர்களின் நிலைமையினை அறிய வெளிப்படையான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணையவேண்டும் என வலியுறுத்தி தீபங்கள் ஏற்றி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

காணாமல்ஆக்கப்பட்டர்களின் போராட்டங்களை உதாசீனம் செய்து சர்வதேசத்தின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக காணாமல்ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் என்னும் சட்டமூலம் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ளதானது காணாமல்ஆக்குவதற்கு துணைநின்ற இராணுவம்,பொலிஸ்,துணை ஆயுதக்குழுக்களை பாதுகாப்பதற்காகும்.இதற்கு ஆதரவளிப்பதுபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது ஏழு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அசீஸிடமும் வழங்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்