காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக போராடிவரும் அவர்களின் உறவுகளுக்கு ஆதரவாகவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஓகஸ்ட்-30) யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது.

எங்களின் அன்புக்குரிய உங்களைப் பற்றிய உண்மையைக் கண்டறியும் வரை எமது பயணம் தொடரும்… என்ற பிரகடனத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு கோரியும் வட மாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் போரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனவழிப்பு போரில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து வட மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் 5 மாவட்டங்கள் சார்பில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றினார்கள். தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் சுடேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.


அதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து காலை 11 மணியளவில் ஆரம்பித்து நாவலர் வீதியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் யாழ் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று கோரிக்கை மனு கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் மாண்புமிகு அன்டோனியோ குட்டரஸ் அவர்களுக்கு முகவரியிடப்பட்ட மனு கையளிக்கப்பட்டது.

இதன் பிரதிகள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மாண்புமிகு செய்யிட் ராட் அல் ஹுசைன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா. பணிக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப உறுப்பினர்களும், பாதிக்கப்பட்ட சமூகத்தினரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் என பலர் பேரணியில் கலந்து கொண்டார்கள்.

இன்றைய பேரணியில் கலந்துகொள்ளும் பொருட்டு மயிலிட்டித்துறை கடற்தொழிலாளர் சங்கத்தினால் சங்க உறுப்பினர்களை நேற்றைய தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

செய்தி மற்றும் புகைப்படம்-காணொளி ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்