காலநீடிப்பு வழங்கிய சர்வதேச சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு நெருக்குதல்களை கொடுக்க வேண்டும்! விக்னேசுவரன்!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக போராடிவரும் அவர்களின் உறவுகளுக்கு ஆதரவாகவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஓகஸ்ட்-30) தமிழர் தாயகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றுள்ளது.

இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண சபை முதலமைச்சர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் விரைந்த உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எழுத்து மூலமும் வாய் மூலமும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியிருந்தும் இதுவரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளிற்கு அரசாங்கம் கூறியும் நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் செயற்படுத்தப்படவில்லை.இதனால் எமது அரசாங்கத்திற்கு மேலதிக இரு வருட காலக்கெடு விதித்த சர்வதேச நாடுகள் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக போதிய நெருக்கடிகளை அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.உங்கள் அனைவரதும் போராட்டத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

நிதீயரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்.

இவ் அறிக்கையினை யாழ் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன் வாசித்தளித்திருந்தார்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்