இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மனித உரிமை அமைப்பொன்றுடன் கூட்டாக இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பன்னாட்டு மனித உரிமைப்புகள், சமூக அமைப்புக்கள் என அனைத்துலக அரசுசாரா அமைப்புக்களை இக்கையெழுத்து இயக்கத்தில் உள்வாங்கும் பொருட்டு இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(1) அரசாங்கத்தினால் அல்லது அதன் முகவர்களால் இப்போது சிறைவைக்கப்பட்டுள்ள அனைவருமடங்கிய பட்டியலைவெளியிடும் படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.

(2) சரணடைந்த தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் பட்டியலை வெளியிடும் படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.

(3) சிறைக் காவல் மையங்கள் அனைத்தையும் பன்னாட்டு நோக்கர்களும் சர்வதேச சமுதாய உறுப்பினர்களும் தடையின்றிப் பார்வையிட சிறிலங்கா அனுமதிக்கக் கோருகிறோம்.

(4) வலுக்கட்டாயக் காணாமலடித்தல் தொடர்பானகுழுவிடம் பாதிப்புற்றவர்கள் நேராக முறையீடுகள் தாக்கல் செய்யஅனுமதிக்கும் வகையில் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் ஒப்பந்தத்தின் 31ம் உறுப்பையொட்டிப் பிரகடனம் செய்யும் படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.

(5) காணாமல் போனோர் அலுவலகத்தில் பன்னாட்டு வல்லுநர்களைச் சேர்த்துக் கொள்ளும்படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்குஅழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.

(6) அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலார் ‘அநேகமாக இறந்துவிட்டார்கள்’ என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா 2016 சனவரிமாதம் கூறியதைப் புலனாய்வு செய்யும் படி சர்வதேசசமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றியகுழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்.

(7) வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ளஅரசுகள் அலகு 32ல் வழிவகை செய்யப்பட்டுள்ள கடப்பாடுகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியிருப்பதைக் கருதிப் பார்க்கும்படி சர்வதேச சமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கமானது காணாமலடித்தலால் பாதிப்புற்றவர்களுக்கு நாங்கள் உரக்கச் சொல்வோம்: ‘உங்களையாரும் மறந்துவிடவில்லை’ என அறைகூவுகின்றது.

நாதம் ஊடகசேவை

About இலக்கியன்

மறுமொழி இடவும்