புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும், இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பில் தெரிவித்தார். அங்குள்ள அரசியல் தரப்பினரைச் சந்தித்துப் பேசியபோது அவர் திடமாக இதனைத் தெரிவித்தார் என்று நம்பகரமாகத் தெரியவந்தது.
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள சேவைக்காலப் பயிற்சி நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இதில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாண சபையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட முறையில் முதல்வரிடம் கேட்டறிந்த அரச தலைவர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன எனவும், அதற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் என்று அறியமுடிகின்றது.
புதிய அரசமைப்புத் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

