ராணுவத்தினர் மீது யார் குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் நாம் அவர்களை காப்போம்-சஜித் பிரேமதாச

ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திஸ்ஸமகாராம பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, படையினருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் போது அரசாங்கம் அதனை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்காது என கூறியுள்ளார்.

முன்னாள் ஐ.நா மனித உரிமை பிரதிநிதியான யஸ்மின் சூக்காவின் தனியார் நிறுவனமொன்று பிரேசிலுக்கு சென்று அங்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் என்ற வகையில் தாம் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் யுத்த வெற்றிவீரர்கள் மீது யார் விரல் நீட்டினாலும் அரசாங்கம் நிபந்தனையின்றி அவர்கள் பக்கம் நின்று செயற்படும் எனவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கம் நாட்டின் படைவீரர்களை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுத்திருந்ததாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை, ஸ்ரீலங்காவில் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்ற முடிவுக்கு எவ்வாறு வந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தை வெற்றிகொண்ட நாட்டின் படையினருக்கு தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் யுத்த வெற்றிக்கழிப்பானது போகப் போக மங்கிப் போனதாக குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு வருகைதந்து , மிகவும் நாட்டுப்பற்று அற்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார் எனவும் விமர்சித்துள்ளார்.

அதன் பின்னர் இந்த உடன்படிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைச்சாத்திட்டார் எனவும் மோதல்களின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்திருந்ததாகவும் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்