கடலில் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை மீனவர் மீட்பு!(காணொளி)

வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றபோது காணாமல் போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை கொத்தியாலடியைச் சேர்ந்த வடிவேலு-சிறிகாந்த் என்ற மீனவர் கடந்த வியாழன்(31/08/2017) அன்று காலை 5.30 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்தார். அன்று மதியத்திற்குள் கரைதிரும்பியிருக்க வேண்டிய குறித்த மீனவர் வியாழன் இரவு வரை கரைதிரும்பியிருக்கவில்லை.

இதனால் அச்சமடைந்த மீனவரின் குடும்பத்தினர் உறவினர்களின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் படகுகள் மூலம் தேடுதலில் ஈடுபட்டிருந்தார்கள். நேற்று முழுவதும் தேடுதல் நடத்தியும் மீனவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்த தேடுதலின் பயனாக அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இயந்திரக் கோளாறு மற்றும் கடல் நீரோட்டத்தினாலும் பாதிக்கப்பட்டு அழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவரை தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றிவைத்திருந்த நிலையிலேயே தேடிச்சென்ற மீனவர்காளால் இனம்காணப்பட்டுள்ளார்.

தென்னிலங்கை மீனவர்களின் கைபேசி மூலம் தான் பத்திரமாக இருக்கும் தகவலை காணாமல் போயிருந்த மீனவர் தனது மனைவிக்கு இன்று காலை தெரியப்படுத்தியதை அடுத்து பரபரப்பு அடங்கியது.

இதையடுத்து மீட்கப்பட்ட மீனவர் பத்திரமாக மீட்டு இன்று மதியம் 1.30 மணியளவில் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். மீனவர் காணாமல் போயிருந்த சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

சிறீகாந்த் அவர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார் என்ற தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையில் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது காத்திருந்து வரவேற்றமை பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியிருந்தது.

மீனவர் பாதுகாப்பாக கரைதிரும்பியதையடுத்து சோகத்தில் இருந்து மீண்டுள்ளது வல்வெட்டித்துறை.

செய்தி மற்றும் புகைப்படங்கள்-காணொளி ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்