பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியா பச்சைக்கொடி காட்டியது

பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. பிரதானமாக, இந்தியாவுக்கான விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பிராந்திய விமான நிலையமாக பலாலி விமான தளத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக இந்தியா சாத்திய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

பலாலி விமான தளத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமானதளம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டால், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டு, சிழவில் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான நிலையம் இயக்கப்படும்.

மேலதிக காணி சுவீகரிப்புக்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், ஓடுபாதையை விரிவாக்காமல், பலாலி விமான தளத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

பொதுவாக, எதிர்கால போக்குவரத்து மற்றும் பாரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டே, பொதுவாக விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் காணி சுவீகரிப்பு சர்ச்சைகள் இருப்பதால், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்காமல் அதனை தரமுயர்த்துவதே தற்போதுள்ள நல்ல தெரிவாகும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான தளத்தின் தற்போதைய ஓடுபாதை 2.3 கி.மீ நீளம் கொண்டதாக உள்ளது. இங்கு, சுமார் 100 பயணிகளை ஏற்றக் கூடிய, போயிங்- 717 போன்ற, ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட விமானங்களை தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்