தமிழ் மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் தமிழர் அரசியல் நிலையும்!

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் என்பது தடுமாறி தடம்மாறி நகர்வதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய அரசியலை கொண்டு நடத்த வேண்டிய பாரிய பொறுப்பானது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்த போதும் அதன் தலைமை, தமிழ் தரப்புக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்களுக்கான பேரம் பேசும் தரப்பாக இல்லாது தென்னிலங்கை சக்திகளுடன் இணக்க அரசியல் என்னும் பேரில் சரணாகதி அரசியல் நோக்கி நகர்கிறது. இது முன்னர் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசத்துடன் ஈபிடிபி செய்த அரசியலை விட கீழ் நிலைக்குச் சென்றுவிட்டது. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்பரசியலில் இருந்து கூட்டமைப்பு தலைமை, தென்னிலங்கையிடம் சரணாகதி நிலையை அடைந்திருந்தது. இதன் மூலம் பாராளுமன்றத்திலும், மாவட்ட மட்டத்திலும் பதவிகளையும், சில சலுகைகளையும் பெற்றுக் கொண்டது. ரணில் – மைத்திரி அரசாங்கம் கூட்டமைப்புடன் தமக்கு ஏற்பட்ட இந்த உறவைப் பயன்படுத்தி சர்வதேச அரங்கில் அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தங்களை குறைத்துக் கொண்டது. இதன் ஒரு வெளிப்பாடாகவே ஐ.நா மனிதவுரிமை பேரவையால் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பும் வழங்கப்பட்டது.

கடந்த மஹிந்த அரசாங்கம் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிருப்தி காரணமாக ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வாக்களித்து தற்போதுள்ள மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களது அடிப்படைப்பிரச்சனைகள் பல இன்றும் தீர்க்கப்படாத நிலையே காணப்படுகின்றது. கடந்த காலங்களைப் போன்று இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்தவர்களாக தமக்கு கிடைத்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்று அரையாண்டைக் கடந்து விட்டது. போராட்ட களத்தில் உள்ள மக்களை வழிநடத்தவும், அந்த மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்களின் போராட்டங்களை வெற்றி பெறச் செய்வதற்கு காத்திரமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய கூட்டமைப்பு தலைமை அதிலிருந்து தவறியிருக்கின்றது.

தேர்தல் மேடைகளில் வடக்கு – கிழக்கு இணைப்பு, அதிகாரத்துடன் கூடிய சமஸ்டித் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மக்களது அடிப்படைச் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு என பல கோசங்களை முன்வைத்த கூட்டமைப்பு இன்று அதனை கைவிட்டு விட்டதா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களது நியாயபூர்வமான கோரிக்கைளை தொடர்ந்தும் வலியுறுத்தும் வகையிலும் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு சிவில் சமூகத்தின் அல்லது மக்கள் இயக்கத்தின் தேவை உணரப்பட்டது. அந்த இடத்தை நிரப்பும் வகையில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை உதயமாகிய போதும் அது இன்னும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியும் உள்ளது.

ஆட்சி மாற்றத்தின் போது தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் புதிய அரசியலமைப்பு என்பவற்றை தேர்தல் மேடைகளில் கூறியே வாக்குப் பெற்றிருந்தது. இதில் இனப்பிரச்சனைக்கான நிரந்த தீர்வை வலியுறுத்தும் புதிய அரசியலமைப்பு தவிர்ந்த ஏனைய இரு விடயங்களையும் தற்போதைய அரசியலமைப்பின் திருத்தங்களின் ஊடாகவே திருத்தத்தை மேற்கொண்டுவிட்டது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலங்கையின் பிரதான பிரதானிகளும், பௌத்த மகாநாயக்கர்களும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக வரவிருக்கும் புதிய அரசியலமைப்பு அமையுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. இதனால் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய காலச் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும், தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தலைமை இந்த விடயத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் காத்திரமான வகையில் என்ன செய்திருக்கின்றது…?

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளின் கூடாரமாக அதாவது தேர்தல் வாக்குக்காக ஒதுங்கும் தளமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றதே தவிர அந்தக் கட்சிக்களுக்குள் சரியான புரிந்துணர்வோ, உடன்பாடுகளோ இல்லை. புதிய அரசியலமைப்பு விவகாரத்தையும் தமிழரசுக் கட்சியே தனித்துக் கையாள்வதால் ஏனைய பங்காளிக்கட்சிகள் இது தொடர்பில் குழப்ப நிலையிலேயே உள்ளது. மக்களது பிரதிநிதிகளுக்கே குழப்பம் என்கின்ற போது அவர்களை தெரிவு செய்த சாதாரண மக்களது நிலை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

புதிய அரசியலமைப்பை ஒரு மூடுமந்திரமாக வைத்துவிட்டு அதனை மக்கள் மத்தியில் திணிப்பதற்கான ஒரு நகர்வை தென்னிலகையின் பிரதான இரு கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. தென்னிலங்கையின் இந்த நகர்வுக்கு தமிழரசுக் கட்சியும் துணை போகின்றது. இந்த நிலையிலேயே புதிய அரசியலமைப்பில் மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் தமிழரசுக் கட்சி தலைமையின் நகர்வுகள் இடம்பெறுகிறது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றது. கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் நடவடிக்கையில் அது ஈடுபட்டு வருகின்றது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இதுவரை 300 வரையிலான கிராமங்களுக்குச் சென்று அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்தல்களை செய்திருக்கின்றது. ஆனாலும், மக்கள் மத்தியில் இன்னும் முழுமையான தெளிவு ஏற்படாத நிலையே தற்போதும் உள்ளது.

ஆசியாவில் இலங்கை முதன் முதலாக சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக் கொண்ட போதும் மக்கள் மத்தியில் அரசியல் அறிவு என்பது இன்றுவரை போதியதாக காணப்படவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் தொடர்பான விழிப்பூட்டல்களை செய்வதற்கு தமிழ் தலைமைகள் தவறியிருக்கின்றன. அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்களால் தான் உரிமைப் போராட்டங்கள் வீரியம் பெற்றிருக்கின்றது. ஒரு தேசம் சிந்திக்க முற்பட்டால் அதன் வேகத்தை எவராலும் தடுக்க முடியாது என்பது பிரான்சியப் புரட்சி சிந்தனையாளர் வோல்ரயர் அவர்களது கருத்து. அந்த நிலை எமது மக்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும்.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வரைபு ஒன்றினையும், மக்கள் எழுச்சியுடன் கூடிய இரு எழுக தமிழ் பேரணிகளுடனும் அமைதியாக இருந்த தமிழ் மக்கள் பேரவை இன்று களநிலையைப் புரிந்து கொண்டவர்களாக மீண்டும் தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து முன்னோக்கி நகர முயற்சிக்கின்றது. அது காலத்தின் தேவையும் கூட. தமிழ் மக்கள் பேரவை மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்யவுள்ளது. அதன் முதல்கட்டமாக எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தெளிவூட்டல் நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப், புளொட், தமிழரசுக் கட்சியின் அதிருப்திக் குழு என்பனவும், அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், சட்டத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் முதன்முதலாக இடம்பெறும் பெரியளவிலான மக்கள் மயப்படுத்தப்பட்ட தெளிவூட்டல் நடவடிக்கையாகவும் அமையவுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை 1833 ஆம் ஆண்டு கோல்புறுக் கமறன் அரசியலமைப்பு தொடக்கம் தற்போதைய இரண்டாம் குடியரசு வரையிலான எந்தவொரு அரசியலமைப்பும் தமிழ் மக்களது விருப்பத்துடன் கொண்டுவரப்படவில்லை. அரசியலமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளே காலத்திற்கு காலம் தமிழ் மக்களது போராட்டங்களை தீவிரப்படுத்த காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களது விருப்பத்துடனும், அவர்களது ஆதரவுடனும் கொண்டு வர இருப்பதாக காட்டிக் கொண்டு தமிழ் மக்கள் விரும்பாத அவர்களது அபிலாசைகளை புறந்தள்ளும் வகையிலான ஒரு அரசியலமைப்பையே திணிக்க முயல்கிறது. இந்த நிலையில் பேரவை எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கை மிகவும் அவசியமானது.

அரசியலமைப்பு விழிப்புணர்வு நடவடிக்கை யாழ் வீரசிங்கம் மண்டபத்துடன் முடங்கி விடாது வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் இடம்பெற வேண்டும். அதன் மூலமே மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த முடியும். அந்த முயற்சியை தமிழ் மக்கள் பேரவை செய்ய உள்ளதாகவே தெரிகிறது. மக்கள் மத்தியில் தெளிவூட்டல்களை செய்யும் வடக்கு முதலமைச்சர் தலைமையிலான பேரவை அந்த மக்களுக்கான ஒரு அரசியல் பலமாக எந்தக் கட்சியை அல்லது அமைப்பை காட்டப் போகின்றது என்ற கேள்வியும் சிலரிடம் உள்ளது. பேரவை அரசியலுக்கு அப்பால் ஒரு மக்கள் இயக்கம் என்றே சொல்லப்படுகின்றது. பேரவையின் கருத்துக்களுக்கும், கூட்டமைப்பு தலைமையின் கருத்துக்களுக்கும் நகர்வுகளுக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உண்டு. அதனால் பேரவையின் பின்னால் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக அணிதிரளும் மக்களை ஒன்றிணைத்து ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டி தேவை இருக்கின்றது. அதனையும் பேரவை செய்ய வேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்காது விடின் விழிப்பு பெற்ற மக்களும் பின்னர் வாக்கு அரசியல் நோக்கி நகரும் போது கூட்டமைப்புக்கு பின்னாலேயே பயணிக்க வேண்டியிருக்கும். இதனால் பேரவையின் நகர்வும் மாற்றுத் தலைமைக்கான ஒரு முயற்சிக்காகவே அமையவேண்டுமே தவிர, வெறும் அரசியல் விழிப்பூட்டலாக அமைந்தால் தமிழ் மக்களது தலைமைக்கான வெற்றிடம் தொடரவே செய்யும். இதனை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நரேன்-

About இலக்கியன்

மறுமொழி இடவும்