20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவு – த.தே.கூ!

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பதாக இணங்கியதை அடுத்து, நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, இரண்டு மாகாணசபைகளில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அதில் திருத்தங்களை முன்வைக்க விருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், குழு நிலை விவாதத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படுவது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதம் செப்ரெம்பர் மூன்றாவது வாரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடனும், கட்சித் தலைவர்களுடனும் நேற்று முன்தினமும், நேற்றும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதனிடையே 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருப்பதாக, சிறிலங்கா பிரதமருடனான கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“குழுநிலை விவாதத்தின் போது குறிப்பிடத்தக்க திருத்தங்களை செய்தால்,, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவளிக்க நாங்கள் இணங்கியுள்ளோம்.

இந்த திருத்த வரைவை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை.

திருத்தச்சட்ட வரைவில் திருத்தங்களை முன்வைப்பது தொடர்பாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு இன்று அறிவிப்பார்.

இந்த திருத்தச்சட்ட வரைவின் பயன்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்ற விடயம் தொடர்பாக நாங்கள் சிறிலங்கா பிரதமருடன் கலந்துரையாடினோம்.

திருத்தச்சட்ட வரைவில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், மாகாணசபை ஒன்றின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக, அதனைக் கலைப்பதற்கு அதிகாரமளிக்கும் விதியில் திருத்தம் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், மேற்பார்வை அரசு ஒன்றை அமைப்பது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது,

தற்போதைய வரைவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடு மாகாணத்துக்குள் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அது ஆளுனரின் கையில் இருக்கக் கூடாது. எனவே மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் அல்லது எஞ்சிய காலத்துக்காக உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

எமது கோரிக்கையை அடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மீதான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையிலும் அவ்வாறு தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழு நிலை விவாதத்தின் போது, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்களைச் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டால், திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம்” என்று கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்