நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி விழுப்புரம் பள்ளி ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திறகு விலக்களிக்க கோரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள அனைவரும் மருத்துவ படிப்புக்கு கட்டாயம் நீட் நுழைவு தேர்வு எழுதவேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் அவசர
சட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி, நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் அரசு தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் டாக்டராக முடியவில்லையே என கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இதையடுத்து, கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவரது மரணத்துக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அத்துடன் மாணவர் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவைச் சேர்ந்த வைரபுரம் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும். இதற்காகவே எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்’ என ஆசிரியை தெரிவித்துள்ளார்.

மேலும், தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்