புதிய அரசியலமைப்பில் மீண்டும் தமிழருக்கு தலையிடி

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், வடகக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகவும், இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தும் இடம்பெறவில்லையென தகவல்கள் கசிந்துள்ளன.

நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான 7 வழிநடத்தல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இந்த அறிக்கையில், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைப்புத் தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனத் தெரியவந்துள்ளது.

இதில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டுமென ஒரு தரப்பும், இணைக்கப்படவேகூடாது எனஇன்னொரு தரப்பினரும், மக்களின் கருத்தறியப்பட்ட பின்னர் மாகாணங்களை இணைக்கலாம் என இன்னொரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாடு எதுவும் எடுக்கப்படவில்லையெனவும், ஒவ்வொரு தரப்பினரும் குறிப்பிட்ட சொற்றொடர்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், மதச்சார்பற்ற என்ற விடயத்தில், பௌத்தத்திற்கே முன்னுரிமை என்ற விடயத்தில் இணக்கம் எட்டப்படவில்லை.

தற்போதைய அரசியலமைப்பின்படி பௌத்தத்திற்கே முன்னுரிமை என ஒரு தரப்பும், மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டுமென இன்னொரு தரப்பும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தாலும், அது தொடர்பாக விரிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்