சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய, ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர், அலிஸ் வெல்ஸ், வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய நிதி விவகாரங்களுக்கான உப குழுவின் முன்பாக, “தெற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கைப் பேணுதல்” என்ற தொனிப் பொருளில் நேற்றுமுன்தினம் அலிஸ் வெல்ஸ் உரையாற்றினார்.

இதன்போது, சிறிலங்கா தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

“சிறிலங்கா அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, 2015 தேர்தல்களில் இருந்து. மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையை அறிமுகப்படுத்தியது.

அதன் பணியாளர்களின் திறனை இன்னும் அதிகரிக்கவும், பொதுமக்களை மேலும் அதிகாரமளிக்கவும், சிறிலங்காவுடன் அமெரிக்கா பங்காளராக இணைந்துள்ளது. சிறிலங்கா அரசு அதன் மறுசீரமைப்பு இலக்கைத் தொடர்கிறது.

பொருளாதார அபிவிருத்தி, ஆட்சி, வர்த்தகம், மற்றும் பாதுகாப்பு விடயங்களில் எமது ஒத்துழைப்பு தொடர்ந்து வருகிறது.

2015இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எமது நாடுகள் இணங்கிக் கொண்ட, 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகவும், மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2017 மார்ச்சில் உறுதிப்படுத்திக் கொண்ட 34/L.1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகவும் நாங்கள் இணைந்து செயற்படுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கம் மரபுசார் நீதி மற்றும் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மீறல் அனுபவங்களை அரசியலமைப்பு, சட்டமன்றம் மற்றும் பாதுகாப்பு மறுசீரமைப்பு ஊடாக, வன்முறைகள் மீள நிகழாமல் தடுத்தல், போன்றவற்றுக்கு இந்த தீர்மானங்கள் உறுதியளிக்கின்றன.

மத்திய அரசாங்கத்திடம் இருந்து சிறிலங்காவின் பிராந்தியங்களுக்கு கூடுதல் நிர்வாக அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, அனைத்துலக தரம் வாய்ந்த நியாயமான சட்டத்தை கொண்டு வருதல், போரின் போது, இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல், காணாமல் போனோர் பணியகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான பணியகம், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமான நம்பகமான பொறிமுறை போன்ற, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குதல், போன்ற சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது.

2019 மார்ச் வரை ஐ.நா தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்யும்.

மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் தொடர்பான தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு, இராணுவம் – இராணுவம் இடையிலான உறவுகள் உள்ளிட்ட ஈடுபாடுகளை விரிவாக்குவதற்கான ஆர்வத்தை அமெரிக்காவுக்குத் தூண்டியது.

எவ்வாறாயினும், சிறிலங்கா அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

அமெரிக்க காங்கிரசின் வரம்புகளுக்கு அமைய, எமது இராணுவ- இராணுவ ஈடுபாடுகள் மெதுவாகவும், படிப்படியாகவும் விரிவாக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்