போர்க்களமாகும் தமிழகம்..நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியல்

நீட் தேர்வை எதிர்த்து சென்னை மகாலிங்கபுரத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து ஆங்காங்கே போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு தினங்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் வலுவடைவதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள 4 கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பிரதான சாலையில் இன்று பிற்பகல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் குவிந்த மாணவிகள், ‘வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்’ என முழக்கங்களை எழுப்பினர்.

இதுதொடர்பான தகவல் அறிந்து பெண் போலீசார் உள்பட காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

மாணவிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்ட மாணவிகளை கலைந்து போகும்படி போலீசார் வலியுறுத்தினர். மாணவிகள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து போலீசார் அகற்றி வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாணவி மயக்கம் அடைந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த பள்ளி ஆசிரியைகள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லும்படி மாணவிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்