பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

தமிழ்த் தேசப் பற்றாளன் பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த 03-09-2017 அன்று இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தோம். புங்குடுதீவு 7ஆம் வட்டாரம், மடத்துவெளியைச் சேர்ந்த பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் காலங்கள் தொடக்கம் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்த பெரும் பங்காற்றியவர்.

கூட்டுறவுத்துறையில் சிறந்த சேவையாளனாக விளங்கிய கனகலிங்கம் அவர்கள் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு தீவிரப்படுத்திய காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வுகளின்போது பொது மக்களுக்கான தங்குமிடம், உணவு மருத்துவம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும், கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்த பாரிய பொருளாதாரத் தடைகளை சிறீலங்கா அரசு வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மீது விதித்திருந்த காலப்பகுதியில் கூட்டுறவுத் துறையூடாக மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதன் மூலம் மக்களை பட்டினிச் சாவிலிருந்தும் பாதுகாப்பதில் அளப்பரிய பங்காற்றியிருந்தார். மேலும் தீவக மக்கள் நலன் காப்பகம், தேசிய எழுச்சிப் பேரவை போன்ற அமைப்புக்களுடாகவும் மக்கள் சேவையை முன்னெடுத்தவர்.

தமிழினம் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தமிழ்த் தேசத்தில் சமத்துவமாகவும், கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்ற கனவோடு தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். தமிழ் மக்களையும், உரிமைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசியத் தலைமையையும் மிகவும் ஆழமாக நேசித்த உண்மையும், நேர்மையும் அற்பணிப்பும் மிக்க உன்னதமான மனிதரை எமது தேசம் இழந்து நிற்கின்றது. தேசப் பற்றாளனாகவும், சமூக சேவையாளனாகவும், இலக்கியவாதியாகவும், சிறந்த குடும்பத் தலைவனாகவும் வாழ்ந்த கனகலிங்கம் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்திற்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.

தமிழ்த் தேசம் விடுதலை பெறவேண்டும் என்ற ஆவலோடு இறுதிவரை வாழ்ந்து இன்று எம்மைவிட்டுப் பிரிந்துள்ள தமிழ்த் தேசப் பற்றாளன் கனகலிங்கம் அவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்