பிரகடனங்களை நிறைவேற்றுமா பேரவை…?

ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியவர்களில் கூட்டமைப்பின் தலைவரும் பெரும்பங்காற்றி மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கியிருந்தார். அத்துடன் புதிய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியும் என்றும் எண்ணியிருந்தார். இந்தப் பின்னனியிலேயே கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதனை சரியான வழியில் கொண்டு செல்வதற்காகவும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்துச் சொல்வதற்காகவும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.

பேரவை தோற்றம் பெற்றத்தில் இருந்து வடக்கிலும், கிழக்கிலுமாக மக்கள் எழுச்சியுடன் கூடிய இரண்டு எழுக தமிழ் பேரணியை நடத்தியதுடன், அரசியல் யாப்பு வரைவு ஒன்றையும் முன்வைத்திருந்தது. புதிய அரசியலமைப்பை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பில் ஒரு பொதுக் கூட்டத்தையும் கடந்த செவ்வாய்கிழமை நடத்தியிருக்கின்றது. கிழக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்கு முன்னதாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி மக்கள் வீதிகளில் இறங்கிவிட்டார்கள். கேப்பாபுலவு மக்கள் தமது காணிக்களை விடுவிக்கக் கோரியும் வீதிகளில் இறங்கியிருந்தார்கள். ஒரு மக்கள் இயக்கமாக சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பேரவையும் இத்தகைய வெகுஜனப் போராட்டங்களை கையில் எடுத்து தலைமை தாங்க தவறியுள்ளது.

அத்துடன் இன்று வரையில் ஒரு அமைப்பு ரீதியாக தன்னை கட்டமைத்துக் கொண்டு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பதற்கு தவறியுள்ளது. மாற்றுத் தலைமை குறித்து சிந்தித்துக் கொணட்டிருக்கும் இந்தவேளையில், பேரவையினுடைய செயற்பாடுகள் அதனை நம்பிய மக்களுக்கு நம்பிக்கையளிக்க கூடிய விதத்தில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முற்று முழுதான சமரச அரசியலில் ஈடுபட்டு இருப்பது தமிழ் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் புதிய அரசியல் யாப்பில் தமிழ் தேசிய இனத்தின் விடிவிற்காக எத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்பது குறித்து இன்று வரை கூட்டமைப்பின் தலைவரோ அல்லது தமிழரசுக் கட்சியின் தலைவரோ மக்களிடத்தில் வெளிப்படையாக கருத்துக்கள் எதையும் முன்வைக்கவில்லை.

பங்காளிக் கட்சிகளிகளைப் பொறுத்தவரையில் ஒரு கட்சியைத் தவிர, ஏனைய கட்சிகள் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரை கேள்வி கேட்கவில்லை. பேரவை தொடங்கிய உடனடியாகவே கிராமம் தோறும் கிளைகள் அமைக்கப்படும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும், வெகுஜன இயக்கங்கள் முன்னெடுக்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் எதுவும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் நடைபெறவில்லை. தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகளே கூட்டமைப்பின் முடிவுகளாக அறிவிக்கப்படுகின்ற நிலையில், அந்தக் கட்சியினுடைய சர்வதிகாரத்தன்மைக்கு மாற்றாக ஒரு ஜனநாயக பன்மைத்துவம் கொண்ட அமைப்பு உருவாக வேண்டிய தேவையும் உள்ள நிலையில், பேரவையின் போக்கானது அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடியதாக இல்லை. இது தமிழரசுக் கட்சியினுடைய ஏகேபோகத்தை ஆதரிப்பதாகவே அமைந்து விடும். ஆகவே, மக்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டும், இதுவரை காலமும் தமிழ் தேசிய இனம் அனுபவித்து வரும் இன்னல்களை கணக்கில் எடுத்துக் கொண்டும், இன்றுள்ள அரசியல் தலைமையின் கையறு நிலையை சரியாக கணித்தும், உண்மையான ஜனநாயக பண்மைத்துவம் கொண்ட உறுதியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தெளிவான கொள்கையுடன், நேர்மையான அரசியல் சிந்தனையுடன், விலைபோகாத மனவுறுதியுடன், செயற்படக் கூடிய நபர்களை அடையாளங்கண்டு அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்குவதற்கு பேரவை முன்வர வேண்டும்.

நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லி வெறும் அழுத்தக் குழுவாக மட்டுமே செயற்படுவோம் என்று நடந்து கொள்வதானது ஏகாதிபத்தியங்களினுடைய காய்நகர்தல்களுக்கு பயன்படுமே தவிர, தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது. ஆகவே, பேரவை தன்னுடைய பெயரிலோ அல்லது தேர்தலுக்காக உருவாக்கப்படுகின்ற வேறு ஒரு பெயரிலோ தேர்தல் களம் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டிக் கோரிக்கை என்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தந்தை செல்வநாயகம் அவர்களால் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வெறுமனே அரைகுறைத் தீர்வினை ஏற்றுக் கொள்வது எக்காரணத்தைக் கொண்டும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. பிரச்சினையைத் தீர்ப்போம் எனக் கூறிக் கொண்டு ஒரு பெயரில் என்ன இருக்கின்றது என்று கூறிக் கொண்டு குறைந்தளவு அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுடன் இணங்கிச் செல்வதை விட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அவர்களது நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும் முன்வைத்து உரிய தீர்வு வரும் வரை சளைக்காது முன்னெடுத்துச் செல்வது அவசியம். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை அடைவதற்காக இதுவரை விலைமதிப்பற்ற தியாகங்களைச் செய்ததுடன் பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து வந்துள்ளனர். இத்தகைய நிலையில் தமிழ் மக்களது நீண்ட நாளைய அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் இடை நடுவே கைவிடுவதற்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவருக்கோ, அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ உரித்தில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சி.வியின் இந்த உரையானது, வெறும் முழக்கமாக மட்டுமன்றி செயல் வடிவம் பெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் இயக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே, பேரயையின் ஒவ்வொரு அமைப்புக்க்கும், அதன் இணைத்தலைவர்களுக்கும் பேரவையின் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையிருக்கிறது. அந்தக் கடமை என்பது அவர்களால் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றிவிட முடியாதது. அதற்கு நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் அவசியமாகும். முதலமைச்சரின் கூற்றில் இருந்து தற்போதைய கூட்டமைப்பின் தலைவருக்கு அது முடியாது என்பது தெளிவாகிறது. ஆகவே, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பேரவையே காத்திரமாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் செயற்பட முடியும். இனியும் காலம் தாழ்த்தாமல் பேரவை கிராமங்கள் தோறும் கிளைக்களைக் கட்டி, மக்களை அணிதிரட்டி மக்களின் போராட்டங்களை கையில் எடுத்து தலைமை தாங்க முன்வர வேண்டும். போராட்ட களத்தில் இருந்தே தலைவர்கள் உருவாவார்கள். அத்தகைய தலைவர்களை சரியாக இனங்கண்டு அவர்களது உறுதிப்பாட்டிற்கும், செயற்திறமைக்கும் ஏற்ப உரிய தேர்தல்களில் அவர்களை களம் இறங்கி மக்கள் பிரதிநிதியாகவும், போராட்டத்தை தலைமை தாங்குபவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தற்போது பேரவைக்கு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவை இதனை சரியாக செய்யும் என்று அரசியல் அவதானிக்களும், ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பேரவை செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

 

நரேன்-

About இலக்கியன்

மறுமொழி இடவும்