ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் வட கொரியா மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வானில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன.
அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும், 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பசிஃபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்பு, அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் உள்ள வான்வெளியில் பறந்துள்ளது.
வட கொரியாவின் இத்தகைய ஆபத்தான செயல்களை ஜப்பான் ‘ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது’ என்று கூறியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, “இதே வழியில் வட கொரியா தொடர்ந்து பின்பற்றினால், அந்நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்
கடந்த மாதம் இதே போன்று வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்றதை ‘முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்’ என்று ஜப்பான் கூறியிருந்தது.
இந்த ஏவுகணை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் சற்று முன்னதாக ஏவப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29 அன்று ஏவப்பட்ட ஏவுகணையை விட, இந்த ஏவுகணை அதிக உயரத்தில் பறந்ததுடன் மட்டுமல்லாது அதிக தூரமும் பயணித்துள்ளது. சுமார் 550 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்த முந்தைய ஏவுகணை 2,700 கிலோ மீட்டர் தூரம் வானில் பறந்து சென்று கடலில் விழுந்தது.
இது, வட கொரியா ஆறாவது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியத்தைத் தொடர்ந்து, ஐ.நா அந்நாடு மீது தடைகள் விதித்ததன் பின்னர் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனையாகும்.
வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவை தாக்குவதற்கு இந்த ஏவுகணையின் தூரம் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சோதனை, ஜப்பானைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள ‘பொறுத்துக்கொள்ள முடியாத’ நிகழ்வு என்று அந்நாட்டு அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியுள்ளார்.
தங்கள் நாடு மேற்கொண்டு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் என்று ஏற்கனவே வட கொரியா கூறியிருந்தது.