கிழக்கு மாகாணசபையில் 20 ஆவது அரசியல் அமைப்பு தொடர்பாக பிழையாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டமானது சுமார் நான்கு மணித்தியாலயங்களாக இடம்பெற்றிருந்தது.
தற்கால அரசியல் நிலைப்பாடுகள், இருபதாவது அரசியல் திருத்தம் தொடர்பான விடயங்கள், கிழக்கு மாகாணசபையில் அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஆதரவளித்தமை தொடர்பான குழப்பகரமான நிலைமைகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஈ.பி.ஆர்.எல்.எவ். தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பாக கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
நீண்ட வாத பிரதிவாதங்களுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்க அக்கட்சியின் தலைவர் பின்னடிப்பு செய்திருந்த போதிலும் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் பிரகாரம் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் இருபதாவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் அரசியல் பீட உறுப்பினருமான துரைரட்ணத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு பதிலளிக்க முடியாது என கூறி அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

