ஜப்பானை மூழ்கடித்து அமெரிக்காவை சாம்பலாக்குவோம்- வடகொரியா மிரட்டல்

பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனை நடந்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டது.

வடகொரியாவை மிரட்டும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் பயிற்சியில் இறங்கினர்.

இதற்கு சற்றும் அஞ்சாத வடகொரியா கடந்த செம்டம்பர் மாதம் 3-ம் தேதி 6-வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடையை கொண்டு வந்து அதனை ஒருமனதாக நிறைவேற்றியது.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையே நிகழும் உறவு முறையை மேற்பார்வையிடும் கொரியா ஆசியா – பசிபிக் சமாதான அமைப்பானது, வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைக்கு காரணமான அமெரிக்கா விரைவில் உடைக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தக் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் எப்போதோ அணுகுண்டால் முழ்கியிருக்கக்கூடும். ஜப்பான் இனி எங்கள் அருகில் இருக்கத் தேவையில்லை.

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா சாம்பாலக்கப்படும். வெறி பிடித்த நாயை அடித்துக் கொல்வது போல் அமெரிக்காவும் அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு துணையிருக்கும் ஜப்பானும் மூழ்கடிக்கப்படும்” என்று கூறியுள்ளது.

ஜப்பான் கடலில் நடுத்தர ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வடகொரியா நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்