வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் மீது சிவில் உடை தரித்தவர்களின் சோதனைகள் அதிகரித்து காணப்படுகின்றது.
பேருந்துகள் வந்து தரித்ததும் பேருந்திற்குள் சென்று சந்தேகத்திற்கிடமானவர்களை கைகளில் பிடித்து அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் 15ற்கும் மேற்பட்ட சிவில் உடை தரித்தவர்கள் மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பிற பகுதிகளிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான பிரயாணிகளை அழைத்துச் சென்று அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டு அவர்களின் விபரங்களைத்திரட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் வியாபாரம் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டினை வியாபார நிலைய உரிமையாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
சிவில் உடை தரித்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் கடைகளுக்குச் சென்று சிற்றுண்டி உண்பதைத்தவிர்த்து வருவதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிவில் உடையில் பொலிசார் எனத் தெரிவித்தே சோதனைகள் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் வவுனியா பேரூந்து நிலையத்தில் 9 பேர் வரை கஞ்சா பெதியுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.