விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்கிறது ஐநா பிரகடனம்- வைகோ

விடுதலைப் புலிகள் 37 பேர்களை என் வீட்டில் வைத்துப் பாதுகாத்ததற்காக, என் உடன்பிறந்த தம்பி வை.ரவிச்சந்திரனைச் சிறையில் அடைத்து, நீதிமன்றத்திக்குக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டுபோனார்கள். தடா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசம் இருந்தார். நான் என் வாழ்நாளில் ஐந்து ஆண்டுகள் சிறையிலேயே இருந்திருக்கின்றேன். விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக மட்டும் 19 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். நான் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை.

இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் நான் பேசினேன்.ஒன்றரை நிமிடம்தான். திட்டவட்டமாகச் சொன்னேன். ஈழத்தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள். (கைதட்டல்) அவர்கள்தான் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். சிங்களவர்கள் அங்கே வந்து குடியேறியவர்கள்தான். ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனக் கொற்றமும், கொடியும் அரசும் அமைத்து வாழ்ந்தார்கள். காலப்போக்கில் போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள் கடைசியாகப் பிரித்தானியர்கள் வந்து, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒரே நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். தமிழர்கள் விடுதலைக்காகப் போராடினார்கள். ஆனால், 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, பிரித்தானியர்கள் தங்களின் யூனியன் ஜாக் கொடியைக் கீழே இறக்கிக் கொண்டு அந்தத் தீவை விட்டுவெளியேறுகின்றபோது, எங்கள் தமிழ் மக்களை, சிங்களவனின் அடிமை நுகத்தடியில் பூட்டி விட்டுப்போய்விட்டார்கள்.

அன்று தொடங்கியது அடக்குமுறை, ஓரவஞ்சகம், நயவஞ்சகம், தாக்குதல்கள். தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டுப் போராடினார்கள். பரிசு துப்பாக்கிக் குண்டுகள்; பரிசு, பயனைட் கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்டனர்; பரிசு, எங்கள் தமிழ்ச் சகோதரிகள் மானபங்கம் செய்யப்பட்டனர்; பரிசு, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

1957 ஆம் ஆண்டு தந்தை செல்வாவோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டனர். 65 ஒப்பந்தத்தையும் கிழித்துப்போட்டார்கள். காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தந்தை செல்வா, நாடாளுமன்றத்திலேயே அதை முன்மொழிந்து விட்டு, தமிழ் எம்.பி.க்களோடு வெளியேறினார்.

1976 மே 16 ஆம் நாள் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் ஒரு மாநாட்டை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றினார். அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு அற்புதமான தீர்மானத்தை வடித்தார். அமெரிக்காக்காரனே அதைப்படித்துவியந்து போனான். அது மேக்னா கார்ட்டாவை விட உயர்ந்தது. ஒரே வரியில், எட்டுப் பக்கத்திற்கு எழுதப்பட்ட தீர்மானம். அப்படி ஒரு தீர்மானத்தை எழுத ஈழத்தமிழர்களை விட வேறு எவராலும் முடியாது.

அந்தத் தீர்மானத்தில்தான் சொன்னார்: இனி சிங்களவர்களோடு சேர்ந்து சகவாழ்வு என்பது சாத்தியம் இல்லை. தனி இறையாண்மை கொண்ட சுதந்திரத் தமிழ் ஈழ நாடு அமைய வேண்டும்; இதை இனி இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார்.

வல்வெட்டித்துறையில் வேலுப் பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் ஒரு பிள்ளை பிறந்தான். 15 வயதில், இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சிங்கள இராணுவத்தினர் கொதிக்கின்ற தாரில் போட்டுக் கொன்றதைப் பார்த்தான். இந்தக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து வீட்டை விட்டு வெளியேறினான்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆயுதப் போராட்டம் நடத்தலாமா? தலைவர் பிரபாகரன் துப்பாக்கி எடுக்கலாமா? என்று கேட்கின்ற மேதாவிகளுக்குச் சொல்லுகிறேன்.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பிரகடனம்: Universal Declaration of Human rights என்ன சொல்லுகின்றது தெரியுமா?

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள்அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை என்ன சொல்லுகின்றது தெரியுமா?

Whereas It is essential, if man is not to be compelled to have recourse, as a last resort to rebellion against tyranny and oppressioon that human rights should be protected by the rule of law.

இது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தின் முகப்புரை.

உரிமைகளும், சட்டங்களும் நசுக்கப்பட்டால், சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சொல்லுகின்றது. அதைச் செய்தவன் என் தலைவன் பிரபாகரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்