முன்னாள் போராளிகளை தடுத்து வைப்பது அடிப்படை உரிமை மீறலாகும்: நீதிபதி இளஞ்செழியன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் விடுவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் அவர்களை தடுத்து வைப்பது அடிப்படை உரிமை மீறலாக அமையுமென மன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதை அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த் ஆட்சேபித்தார். சந்தேகநபர்களை விடுவித்தால் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதென்றும் குறிப்பிட்டார்.

இதற்கு விளக்கமளித்த நீதிபதி இளஞ்செழியன், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்களை இலங்கை சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகளென கருத முடியாதென்றும், இச் சந்தேகநபர்கள் ஐவரும் முன்னாள் போராளிகள் என்பதால் அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை உரிமை மீறலாக அமையுமென்றும் குறிப்பிட்டு, அதனடிப்படையில் சந்கேதநபர்களை பிணையில் விடுவிப்பதாக குறிப்பிட்டார்.

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த ஐந்து சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்