முகமாலையில் அகற்றப்படாத வெடிபொருட்களால் மீள்குடியேற்றம் தாமதம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் வெடிபொருள் அகற்றுவதில் உள்ள தாமதம் மற்றும் பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைதீவு முழுமையாக விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது.

தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்குமாறு, கிளிநொச்சி மாவட்டத்தில் 741 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேசத்தில் 130 குடும்பங்களும் கண்டாவளை பிரதேசத்தில் 21 குடும்பங்களும் பூநகரி பிரதேசத்தில் 357 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 233 குடும்பங்களும் என, 741 குடும்பங்களைச் சேர்ந்த 2422 பேர் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், ராணுவ பிரசன்னம் மற்றும் வெடிபொருள் அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் இம்மக்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், குறித்த பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை முழுமையாக அகற்றுவதோடு, படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளையும் விடுவித்து துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த யுத்தத்தின் போது லட்சக்கணக்கான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட இடமாக முகமாலை காணப்படுகிறது. குறித்த பகுதியில் சுமார் 250,000 இற்கும் அதிகமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, தொடர்ந்தும் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முகமாலையில் அவ்வப்போது நிலக்கண்ணி வெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தற்போதும் வெடிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் இது, மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்