தென்னிலங்கையின் நகர்வும் முதலமைச்சரின் நல்லெண்ண விஜயமும் -நரேன்

ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் 36 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமும், அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் வருகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பில் வர்த்தமானியும் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியும் ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக ஞாயிறன்று நியூயோர்க் சென்றுள்ளார். ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் அவர்களையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து விபரிக்கவுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வடக்கு மாகாண முதலமைச்சரும் கடந்தவாரம் கண்டியில் பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்தும், அந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இணைந்த வடக்கு- கிழக்கில் ஒரு சமஸ்டி ஆட்சி முறையே தீர்வாக அமைய முடியும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இருப்பினும் பௌத்த மதத்தலைவர்கள் சமஸ்டி என்பது ஒரு பிரிவினை என்பதாக பார்ப்பதையும், அந்த நிலையில் இருந்து அவர்கள் மாற விரும்ப வில்லை என்பதையும் முதலமைச்சரின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் முதலமைச்சரின் விஜயமானது நாடு ஒரு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சகல தரப்பினரும் இணைந்து புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் முகமாக அமைந்திருந்தது.

புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனையை சுமுகமாகவும், தேசப்பற்றுடனும், அணுகுவதற்கு தென்னிலங்கை சமூகம் இன்னும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டி இருப்பதை முதலமைச்சரின் இந்த விஜயம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆக்ரோசமாக பேசும் அரசாங்கத் தரப்பினர் வழக்கப் போலவே ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தங்களது குரல்களை தாழ்த்தி உரைக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூட ஒரு சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். வெளி அழுத்தங்கள் காரணமாகவே சுய விருப்பமின்றி தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருப்பதை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் பிரதிநிதிகளான அரசாங்கமே ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் மீது தனது நல்லெண்ண செயற்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். அது தான் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வதற்கு வழிசமைக்கும். ஆனால் இங்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியான முதலமைச்சர் சிங்கள பௌத்த மதத்தலைவர்களை சந்தித்து தமிழ் மக்களது நிலையை எடுத்துச் சொல்லி அவர்களது ஆதரவைக் கோரியுள்ளார். இருப்பினும் அவரது வேண்டுகோள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்தச் சந்திப்பு குறித்து முதலமைச்சர் ‘தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை. கொடுப்பதை வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்றே அவர்கள் இன்னும் கருதுகின்றார்கள். எனவே நிலையான மாற்றத்துக்காக கடினமாக முயற்சிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். இதனை தமிழ் மக்களும், அவர்களது தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் புரிந்து கொண்டு நகரவேண்டியுள்ளது.

ஐ.நாவில் இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்த நேரத்தில் அரசாங்கம் சில விடயங்களை செய்துள்ள காட்ட முனைகிறது. மேலும் இருக்கின்ற கால அவகாசத்தில் ஏனையவற்றையும் செய்து முடிப்பதாக கூறுகின்றது. இது அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்களுக்களை காப்பதற்காக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. இருக்கின்ற அதிகாரங்களையும் பறித்தெடுத்தும், தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளை பலவீனமாக்கியும் சட்டபூர்வமாக தேசிய கட்சிகள் ஆளுகை செலுத்தும் வகையில் மகாணசபை தேர்தல் முறையில் 20 ஆவது திருத்தச் சட்டம் மூலம் மாற்றங்கள் கொண்டு வர அரசாங்கம் எத்தனிக்கின்றது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சியும் தனது ஆதரவை வழங்கியுள்ளது. ஒரு புறம் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அரசமைப்பை கோருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுபுறத்தில் 20 ஆவது திருத்தத்தை ஏற்பதாக கூறுகிறது. இது அரசியல் தற்கொலை முயற்சியாக சகல புத்திஜீவிகளாலும், முற்போக்கு சிந்தனையாளர்களாலும் பார்க்கப்படுகிறது.

அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் ஒரு சுயாட்சி அலகை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை பின்னினைப்பாக வழங்கியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கான ஆதரவு என்பது எந்த வகையில் பொருத்தமானது என்ற கோள்வி இயல்பாகவே எழுகின்றது.

தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனை என்பது சகல தேசிய இனங்களுடனும், சகல உரிமைகளுடனும் கைகோர்த்து சமமாக நடக்க வேண்டும் என்பதே. ஆகவே இதனை பெரும்பான்மை தேசிய இனவாதிகள் அனைவரும் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப்பாகும். இதனையே ஐ.நாவின் மனிதவுரிமை ஆணையாளரும் இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டமைப்பின் உடைய தலைவரும் முதலமைச்சரின் செயல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்பட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்றி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.

காரண காரியங்களை தேடிக்கொண்டிருக்காமல் முழு மனதுடன் இந்த நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இலங்கையர்களே என்ற எண்ணத்துடன் இதுவரை காலமும் ஒடுக்கப்பட்டு வந்துள்ள தமிழ் தேசிய இனத்திற்கு அதன் வாழ்வுரிமையை வழங்கி சமத்துவதாக வாழக் கூடிய நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இதன் மூலமே இந்த நாட்டை சகல நெருக்கடிகளில் இருந்தும் விடுவித்து முன்னோக்கி நகர்த்த முடியும்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிங்கள இனவாதிகளால் கொல்லப்படுவது குறித்து எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்களைப் பற்றிதெற்கில் மிகக்
"வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண
இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது. தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*