“சம்பந்தனுடன் எப்படி ஒத்துழைத்துச் செயற்படுவது? அவர் அரசின் பிரதிநிதி போலல்லவா நடந்துகொள்கின்றார். தமிழர்களின் பிரதிநிதிபோல் அவர் செயற்பட வேண்டும்”
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அரசமைப்புத் திருத்தம் உள்பட நாட்டின் முக்கிய பிரச்சினை களைத் தீர்த்துக்கொள்ள முன்னாள் அரச தலைவரின் ஒத்துழைப்பு தேவை, அதற்காக அவருடன் பேச்சு நடத்தப்பட்டது. அந்தப் பேச்சு தொடரும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை அண்மையில் சந்தித்தபோது கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதுபற்றிக் கேட்டபோது மேற்படி கருத்தை வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, “தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
“தேர்தல்களை ஒத்திவைக்க இவர்கள் இந்த அரசுக்குத் துணைபோகின்றனர். இது மக்களின் உரிமையை மீறும் செயல் அல்லவா? இவர்கள் இப்படி நடந்துகொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இப்படிச் செயற்பட்டு என்னிடம் ஒத்துழைப்பை எதிர்பார்த்தால் நான் எவ்வாறு அதனைச் செய்வது? சம்பந்தன் என்னுடன் பேசும்போது அவர் இந்த அரசின் சார்பில் பேசுவது போலல்லவா இருக்கிறது. அவர் தமிழ் மக்களின் பிரதிநிதிபோல் நடந்துகொண்டால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது பற்றி யோசிக்க முடியும் – என்றார்.