பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு – தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை காண பரோல் கேட்டு பேரறிவாளன் விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளனின் விண்ணப்பத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

நாளையுடன் ஒரு மாதம் பரோல் முடிவடையும் நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மேலும் ஒருமாதம் நீட்டிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக உத்தரவிட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரோகிங்கியா அகதிகளை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மியான்மரில் நடைபெறும் படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சீமான், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்