மனித உரிமை விவகாரம்…அல் ஹூசைனை சந்தித்த மைத்திரி

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை அதன் பிரகடனங்களுக்கு அமைவாக, நாட்டு மக்களின் நலன் கருதி பொறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாட்டினை படிப்படியாக முன்னோக்கி இட்டுச் செல்வதாக சிறீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொது சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4.30 க்கு இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறீலங்கா ஜனாதிபதி தௌிவுப்படுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, நாட்டின் உள்ளக அரசியல், கலாசார விடயங்கள் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக சிறீலங்கா ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான அலுவலகத்தை ஸ்தாபிப்பது குறித்த வர்த்தமானியில் இந்த விஜயத்திற்கு முன்னர் தாம் கையொப்பமிட்டதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த அலுவலகம் எதிர்காலத்தில் சிறப்பான முறையில் இயங்கும் என சுட்டிக்காட்டிய சிறீலங்கா ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஜனாதிபதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வடக்கிலுள்ள காணிகளிலும் குறிப்பிடத்தக்களவு காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய காணிகளை, நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு கண்டு முறையாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சிறீலங்கா ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இலங்கை இந்த விடயம் தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இந்த செயற்பாடுகள் மேலும் துரிதமடைந்தால் அது குறித்து மகிழ்ச்சியடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை பாராட்டியுள்ள இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன், இதற்கான நியமனங்களை மேற்கொள்ளும் போது, அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு அதிக பட்ச ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு முன்வரும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்