பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!!

உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அமைப்பான ஐ.நா அன்று அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் போல இன்று பர்மாவின் சிறுபான்மையினமான ரொகிங்கா இனம் பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் போதும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் எடுத்து தடுத்து நிறுத்தாமல் இறப்புக் கணக்கெடுப்பையும் எழுந்தமான கண்டனத்தையும் மாத்திரம் பதிவு செய்து கொண்டிருக்கிறது.

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அடிப்படையிலேயே பலமான அரசியற் பின்னணி இல்லாத ரொகிங்கியா இன மக்கள் எதிர்காலத்தில் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது. ரொகிங்கிய மொழி இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்தது, ரொகிங்கிய இனமக்கள் மியான்மாரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகின்றார்கள். மியான்மாரில் எட்டு லெட்சம் ரொகிங்கிய இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, இவர்கள் தம்மை மியான்மாரின் பூர்வீகக் குடிகளென்று கருதும் போது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் வங்காள தேசத்தில் இருந்து மியான்மாருக்கு குடிபுகுந்தவர்களென்று மியான்மாரின் பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர்.

1950க்கு முன்னுள்ள எந்தவொரு பர்மிய அரச ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறி இவர்களை சட்ட விரோத வந்தேறிகளாக கருதி நாட்டில் உள்ளவர்களுக்குரிய எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் கொடுக்க மியான்மார் அரசும் மறுத்து வருகிறது. 1948 ல் ஆங்கிலேயர்கள் மியான்மாரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்காக்களை தனித்த தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978 ல் சர்வாதிகார இராணுவத்தால் ஒடுக்கப்பட்ட இவர்களது குடிஉரிமையும் 1982ல் புதிய குடிஉரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு பறிக்கப்பட்டது. இதனால் உரிய பயண ஆவணங்கள் அனைத்தும் பறிக்கப்பட்ட இம்மக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.

எப்படி ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த போது ஐ.நா அறிவித்த பாதுகாப்பு வலையத்துள் மக்கள் அனுப்பப்பட்டு மிகுதி இடங்களை சிங்கள அரசு இலகுவில் கைப்பற்றுவதற்கு ஐ.நா மக்கள் பாதுகாப்பு எனும்பெயரின் வழி செய்ததோ அது போலவே ரொகிங்கிய மக்களின் சொந்த வாழிடங்களை விட்டு பெயர்த்து அவர்களை ஐ.நா குறிப்பிட்ட முகாம்களுள் அடைக்க ரொகிங்கிய மக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமங்கள் எல்லாம் பர்மிய அரசால் முழுவதுமாக எரியூட்டப்பட்டு கையகப்படுத்தப் பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்காலின் முன்னரும் பின்னரும் இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த பிக்குகளுக்கும், பர்மாவில் உள்ள பேரினவாத பிக்குகளுக்கும் இடையில் சேர்ந்து ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவதற்கான மாநாடு நடாத்தப்பட்டு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 1982 இலும் பின்னரும் ரொகிங்கிய மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மியான்மார் அரசினதும், மதவாதிகளினதும் தாக்குதல்களால் நாட்டை விட்டு தப்பிய ஓடிய லெட்சக்கணக்கான ரொகிங்கிய மக்கள் பலர் கடலில் மாண்டார்கள். எஞ்சியோர் தாய்லாந்து, வங்காளதேசம், மலேசியா என இன்னமும் சிதறி வாழ்வதாகவும் இது நன்கு திட்டமிடப்பட இனச் சுத்திகரிப்பெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூகீயும் கூட ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. இருபது வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பௌவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பௌத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு நோர்வே அரசால் திரும்பிப் பொறப்பட வேண்டும் என்பதே உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக இன்று இருக்கின்றது. சிறீலங்காவில் எப்படி தமிழர்களை வந்தேறிகளாக சிங்கள மக்களுக்குக் காட்டுவதில் சிங்கள பௌத்த பேரினவாதம் வெற்றி கொண்டுள்ளதோ அதே உத்தியைத்தான் மியார்மாரின் பௌத்த பேரினவாதம் கையாண்டு ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது.

அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பௌத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர் பௌத்த பிக்குகள். இது குறித்து அமெரிக்காவின் ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளித்த ‘அசின் விராத்து’ என்னும் பௌத்த பிக்கு ‘அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான் அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்கமுடியுமா?’ என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். இப்படியான பௌத்த மதவாதிகளுக்குத்தான் தற்போதைய பர்மிய அரசு தமது முழு ஆதரவை வழங்கி வருகிறது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தாலும், சர்வதேச சக்திகளாலும் கண் முன்னே இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களான நாம் அதே சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பர்மிய பௌத்த பேரினவாத்தால் கேட்பாரற்று இனச் சுத்திகரிப்புச் செய்யப்படும் ரொகிங்கிய மக்களின் வாழ்வுரிமையையைக் காக்க அனைவரையும் ஒன்றிணைத்து குரல் கொடுக்க வேண்டுவதுடன் ரொகிங்கிய மக்களுக்கெதிரான மியார்மார் அரசின் செயற்பாட்டிற்கும், ஐ.நாவின் பாராமுகத்துக்கும் மக்களவையினராகிய நாம் எம்முடைய வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்