பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கவில்லை.
பிரதிவாதிகள் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை முற்படுத்தவுள்ளனரா அல்லது அரச சட்டத்தரணியின் உதவியைக் கோருகின்றனரா என்பது தொடர்பில் மன்றுக்கு அறிவிக்குமாறு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
சந்தேகநபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கை ஏனைய நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டாம் என தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

