திருகோணமலையில் மற்றுமொரு சித்திரவதைக் கூடம் – குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர் பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த புதிய சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

திருமலை கடற்படை முகா மில் உள்ள கன்சைட் எனும் இடத்தில் இரகசிய சித்திரவதை கூடங்களுக்குள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்திருந்ததுடன் அந்த நிலத்தடி முகாமில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலக் கீழ் இரகசிய சித்திர வதைக் கூடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.

திருமலை கன்சைட் நிலத்தடி முகாமில் இடம் பெற்ற விடயங் கள் தொடர்பில் கடந்த இரு வாரங்களுக்குள் கடற்படையின் 25 உத்தியோகத்தர்களை விசாரணை செய்த போது இந்த புதிய நிலத்தடி சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று தெரிவித்தார்.

புதிதாக வெளிப்படுத்தப்பட்ட குறித்த சிறைக் கூடங்களிலும் பெருமளவிலானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமை தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் யார் என இதுவரையிலான விசாரணைகளில் தகவல் வெளிப்படவில்லை எனவும் அவர் நீதிவானிடம் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 7 பேரில் விளக்கமறியலில் இருந்துவரும் அறுவரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை கோட்டை நீதிமன்றம் நீடித்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்