வித்தியா படுகொலை வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதி எமது பெண்களுக்கான பாதுகாப்பு வேலியாகும்! – அனந்தி சசிதரன்

கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதியானது எமது பெண்களுக்கான பாதுகாப்பு வேலியாக அமைந்துள்ளது.

2009 மே-18 இற்குப் பின்னரான காலகட்டத்தில் எமது சமூகம் முகம்கொடுத்துவரும் பாரிய சவாலாக உருவெடுத்திருக்கும் பெண்களுக்கான பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினையின் குறியீடாக பாடசாலை மாணவி வித்தியா விடயம் அமைந்துள்ளது.

எதிர்காலக் கனவுகளை நினைவில் சுமந்து பாடசாலை சென்ற வித்தியா ஈவிரக்கமற்ற கொடியவர்களால் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தமிழர் தாயகத்தில் தமிழ்ப் பெண்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியதுடன் தாயகம் மற்றும் புலம்பெயர்வாழ் தமிழர்களிடத்தே பெரும் அதிர்ச்சியினையும் ஆவேசத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நீதியின் கரங்களுக்குள் வித்தியா படுகொலை வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சீராய்வு செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி யாழ். மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்ட ட்ரயல் அட் பார் மன்றில் வரலாற்றுச் சிறப்புமிக்க இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொடிய குற்றத்தை மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதியுச்ச தண்டனையானது மீண்டுமொருமுறை எமது பெண்களுக்கு எதிரான இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாதவண்ணம் இத்தீர்ப்பு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனங்களில் உளவியல் ரீதியான பேரச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான கொடுங்குற்றங்கள் மேற்கொள்ள எத்தனிப்போரிற்கு எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு என்றென்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

இதேவேளை கடூழியச் சிறைத்தண்டனை உள்ளிட்ட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இக் கொடிய குற்றவாளிகளில் ஒருவரான சசிக்குமார்(சுவிஸ் குமார்) என்பவரை காப்பாற்றும் முயற்சியில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் ஈடுபட்டது குறித்து நீதிமன்றத் தீர்ப்பில் குறித்துரைத்து கண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத் தீர்ப்பின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள் தம்மை இக்கடுமையான தண்டனையில் இருந்து விடுவிக்க எடுக்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் புறந்தள்ளுவது மீண்டுமொரு முறை இவ்வாறான குற்றங்கள் நிகழாதவண்ணம் தடுக்க வழிவகுக்கும்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்