உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதி மருத்துவமனையில் அனுமதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணவிரதம் மேற்கொண்ட அரசியல்கைதிகளில் ஒருவர் இன்று (சனிக்கிழமை) சிறைச்சாலை மருத்துவமுகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது விசாரணையை தமிழில் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அரசியல் கைதிகளான திருவருள், சுலக்சன், தர்சன் ஆகியோர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் அவர்களின் வழக்கு விசாரணை வவுனியாவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 25ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் அனுராதபுரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த மூவரும் அன்றிலிருந்து மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒருவர் உடல் நலம் குன்றிய நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மற்றுமொரு அரசியல் கைதி உடல் நல குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவருள், சுலக்சன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், தர்சன் என்பவர் இன்று மீண்டும் சாதாரண கைதிகளறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது வழக்கு விசாரணை தமிழ் மொழியில் இடம்பெற வேண்டும் என தெரிவித்து மூவரும் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்