பிரிவினையை தூண்டும் மாகாண சபைகளுக்கு கடும் கிடுக்கிப்பிடி

பிரிவினைவாத செயற்பாடுகளில் ஏதேனும் மாகாண சபை செயற்படுமாக இருந்தால் அந்த மாகாண சபைகள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் உத்தேச அரசியலமைப்பில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரிவினை எண்ணத்தில் மாகாண நிர்வாகிகளினால் போராட்டத்தை நடத்திச் செல்லும் நிலைமை ஏற்படுமாக இருந்தாலே , அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறி செயற்பட்டாலோ , நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டாலோ நேரடியாக பிரதமரின் ஆலோசனைக்கமைய சம்பந்தப்பட்ட மாகாண சபையின் முழு அதிகாரங்களையும் ஜனாதிபதியினால் தன்வசப்படுத்த முடியும். எனவும் தேவைப்பட்டால் அவரால் மாகாண சபையை கலைக்கவும் முடியும். எனவும் ஜயம்பதி விக்கிரம ரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை பிரிக்கப்பட முடியாத ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டும் வகையில் தற்போதைய அரசியலமைப்பில் இல்லாத விசேட ஏற்பாடுகளையும் உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.

அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாவது,
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் கலந்துரையாடுவதற்காக வாய்ப்பளிக்க கூடிய விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களையே நாங்களும் எதிர்ப்பார்க்கின்றோம். இதன் மூலம் மக்கள் தீர்மானமொன்றுக்கு வர முடியும். கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அறிந்துக்கொள்ளலாம். இலங்கை ஒற்றையாட்சி நாடு , இறையாண்மை மக்களிடம் உள்ளது. அதனுள் அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்கு உரிமைகளும் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில் அதிகார பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகளை அடிப்படையாக கொண்டு சிலர் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். இந்த நாட்டின் ஒற்றையாட்சிக்கு இந்த யோசனை மூலம் பாதிப்பாக அமையுமென அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் சமஷ்டி அம்சம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது போன்ற எந்தவொரு சமஷ்டி அம்சமும் கிடையாது. என்பதனை தெளிவாக கூறிக்கொள்கின்றேன். நாட்டு பிரிவினைக்கு எதிராக தற்போதைய அரசியலமைப்பிலும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகளும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. இலங்கையின் இறையாண்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் தற்போதைய அரசியலமைப்பில் இல்லாத விடயங்கள் மற்றும் பகுதிகள் இதில் உள்ளன. இறையாண்மையை பிரிக்க முடியாது. இது முழு இலங்கையருக்கும் உரித்தானது.

இலங்கை பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத நாடாகவே இருக்கும். இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் இது தொடர்பாக தெளிவான ஒன்றும் கிடையாது. அத்துடன் நாடு பிளவுபடுவதை தடுக்கும் நோக்கில் விசேட சட்டதிட்டங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அதிகார பகிர்வு உச்சளவு நடக்கும். அத்தோடு அரசியலமைப்பில் ஏதேனும் திருத்தமோ அல்லது புதியதொன்றை கொண்டு வருவதென்றாலோ பாராளுமன்றத்திற்கும் , அரசியலமைப்பு சபைக்கும் மட்டுமே முடியும். தேவையான விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்லலாம். இலங்கை சுயாதீன மற்றும் குடியரசு நாடு என்பதுடன் அரசியலமைப்பினூடாக அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள மத்திய மற்றும் மாகாண சபைகளை உள்ளடக்கிய ஒருமித்த நாடு என தமிழ் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்பது பிளவு படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்பதே ஆகும். இறையாண்மையை பகிர முடியாது. சமஷ்ட்டி அம்சம் இருந்தாலே இறையாண்மையை பகிரமுடியும். ஆனால் எமது நாட்டின் தற்போதைய எந்த இடத்திலும் இறையாண்மையை பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் உத்தேச அரசியலமைப்பில் இறையாண்மையை பகிர முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டை பிரிக்க முடியாது என்ற விடயத்தை பார்த்தால் இதற்காக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என அரசியலமைப்பில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் நிலப்பரப்பில் எந்தவொரு பகுதியையும் தானி நாடாக அறிவிப்பதற்கோ அது தொடர்பாக கதைப்பதற்கோ அதற்காக மாகாணத்தை அல்லது அதில் பகுதியை ஒதுக்குவதற்கோ எந்தவொரு மாகண சபைக்கோ அல்லது வேறு அதிகார சபைகளோ நடவடிக்கையெடுக்கப்படக் கூடாது. என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பையும் பார்க்க பலமானதாக இது இருக்கும்.
அத்தோடு ஏதேனும் மாகாண சபை பிரிவினைவாதத்தை தூண்டினால் அல்லது பிரிவினைவாதத்திற்குள் தள்ள முயற்சித்தால் மற்றும் தமது அதிகாரங்களை பயன்படுத்தி அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலோ அந்த விடயத்தில் தலையிடுவதற்கு தற்போதைய அரசியலமைப்பில் அதிகாரங்கள் கிடையாது. 1991 காலப்பகுதியில் வட கிழக்கு மாகண சபையில் தனிநாடு கோரிக்கை தொடர்பான பிரச்சினை எழுந்தது. அப்போது மாகாண சபையை கலைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமிருந்தது. ஆனால் அரசியலமைப்பில் இடமிருக்கவில்லை. இதன்போது மாகாண சபைகள் சட்டத்தில் விசேட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் உத்தேச அரசியலமைப்பில் தெளிவான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாகாண நிர்வாகிகளினால் போராட்டத்தை நடத்திச் செல்லும் நிலைமை ஏற்படுமாக இருந்தாலே , அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறி செயற்பட்டாலோ , நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டாலோ மத்தியில் பிரதமரின் யோசனைக்கு அமைய ஜனாதிபதியினால் செயற்பட முடியும். ஜனாதிபதிக்கு மாகாண நிர்வாகத்தில் முழு அதிகாரம் அல்லது சில விடயங்களை தனக்கு கீழ் எடுத்துக்கொள்ள முடியும். அல்லது மாகாண ஆளுனர் அல்லது முதலமைச்சர் அல்லது மாகாண அமைச்சரவை அல்லது மாகாண நிறுவனங்களின் முழு அதிகாரங்களையோ அல்லது சில விடயங்களையோ ஜனாதிபதிக்கு கீழ் கொண்டு வர முடியும். தேவைப்பட்டால் மாகாண சபையை கலைக்கவும் முடியும்.

இதன்படி தெளிவான விடயங்கள் உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. என்பதனை புரிந்துக்கொள்ளலாம். குறிப்பாக நாட்டின் இறையாண்மையை பாதுகாத்தல் , பிரிவினைவாதத்தை தடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதனை புரிந்துக்கொள்ளலாம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்