கருணா தலைமையில் களமிறங்கும் பசில்!

இலங்கை அரசியல் தளம் பல தேர்தல்களை சந்திக்க தயாராகி வரும் நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ராஜபக்ச குடும்பத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மனநிலைகளை அறிந்து கொள்ளும் பரீட்சார்த்த நடவடிக்கையை ராஜபக்சர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றதுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்யும் பசில், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளார். அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை பசில் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் பல்வேறு சந்திப்புக்களை பசில் மேற்கொள்ளவுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசு தயாராகி வரும் சூழலில் “தாமரை மொட்டு” சின்னத்தில் வாக்குகளை வேட்டையாட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் நாட்டின் நாலாபுறத்திலும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அரசியல் செயற்பாட்டாளர்களையும் வளைத்துப் போட்டு வருகின்றனர்.

பலமான கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்கி மீண்டும் நாட்டில் பலம் மிக்க சக்தியாக உருவாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளின் ஒரு கட்டமாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயம் அமைந்துள்ளது.

வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள பசில் ராஜபக்ச கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் நேற்றை வரை மூன்று நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் கருணா தலைமையில் தீவிர அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே செறிந்து வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே வாக்கு வங்கியை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்